சினிமா

AK எனும் அஜித் குமார்! ரசிகர்களின் ரெட் டிராகன்... அன்றும்... இன்றும்... என்றும்... ரசிகைகளின் காதல் மன்னன்!

ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.

AK எனும் அஜித் குமார்! ரசிகர்களின் ரெட் டிராகன்... அன்றும்... இன்றும்... என்றும்... ரசிகைகளின் காதல் மன்னன்!
ரஜினி, கமல், விஜயகாந்த் என 80களுக்கு பிந்தைய தமிழ் சினிமா ஹீரோயிசத்தின் உச்சத்தை தொட்டிருந்தது. 1990களில் அதன் நீட்சி இன்னும் வீரியம் எடுத்தது. ஒரேநேரத்தில் விஜய்யும் அஜித்தும் களமிறங்க, ஆரம்பத்தில் சில தோல்விகளை கொடுத்த அவர்கள், பின்னர் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினர். இவர்களில் தனக்கான தனி ரூட்டை பிடித்தவர் அஜித் தான்.

அமராவதி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித், ஆசை திரைப்படம் வெளியான பின்னரே ஹீரோவாக தனித்து தடம் பதிக்கத் தொடங்கினார். ஆசை நாயகனாக காதல் கோட்டை திரைப்படத்தை சூப்பர் ஹிட் கொடுத்த அஜித், அடுத்த ஒரே வருடத்தில் ரசிகைகளின் காதல் மன்னனாக மாறி மாஸ் காட்டினார்.

அன்று முதல் அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகனாக வலம் வரத் தொடங்கிய அஜித், அதன்பிறகு செய்ததெல்லாம் மிரட்டல் சம்பவங்கள் எனலாம்.

அறிமுக இயக்குநர்களின் நம்பிக்கை நாயகனாக தன்னை ஒப்புக்கொடுத்த அஜித், சரண், எஸ்ஜே சூர்யா, ஏஆர் முருகதாஸ் உட்பட பலருக்கும் வாய்ப்புக் கொடுத்து, அவர்களை கை தூக்கி விட்டதோடு, தமிழ் சினிமாவுக்கும் புதிய வெளிச்சம் கொடுத்தார்.

அதன்படி இந்த இயக்குநர்களின் காதல் மன்னன், வாலி, தீனா போன்ற திரைப்படங்கள், அஜித்தின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

ஒருபக்கம், உன்னைத்தேடி, ஆனந்த பூங்காற்றே, முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம் என காதல் படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக சிலிர்க்க வைத்த அஜித், இன்னொரு பக்கம் அமர்க்களம், சிட்டிசன், ரெட், வரலாறு, பில்லா, மங்காத்தா என மரண மாஸ் காட்டினார்.

இந்த அதகளங்களுக்கு மத்தியில் அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். ஆனாலும் இப்போது வரை, ரசிகர்கள் அவரை கொண்டாடி வருவது பலரையும் வாயடைக்க செய்துள்ளது.

ஹீரோவாக மட்டுமே இல்லாமல், கெஸ்ட் ரோலிலும் என்ட்ரி கொடுக்க தயங்காத அஜித், வாய்ப்பு கிடைத்தால் முரட்டுத்தனமான வில்லனாகவும் மிரட்டுவதில் கெட்டிக்காரர்.

அதேபோல், வெரைட்டியான கேரக்டர்களில் நடித்தாலும் தனது ஸ்டைலிஷான ஆக்டிங், மாஸ்ஸான மேனரிஸம் ஆகியவற்றால் இப்போது வரை ரசிகர்களின் ரெட் டிராகனாக வலம் வருகிறார் அஜித்.

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடிகராக அறிமுகமான அஜித், இன்று மாஸ் ஹீரோவாக வலம் வருவதுடன், அனைத்துவிதங்களிலும் ரசிகர்களின் தன்னம்பிக்கை நாயகனாக ஜொலித்து வருகிறார். உழைப்பாளர் தினத்தில் பிறந்து, உழைப்புக்கும் அதனால் கிடைக்கும் வெற்றிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மே தின நாயகன் அஜித்துக்கு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்கிறது குமுதம் நியூஸ்.