Breaking news

எம்புரான் படத்தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்புரான் படத்தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
empuraan

நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இந்தியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள "எம்புரான்"" திரைப்படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது, தயாரிப்பு நிறுவனம் தொடர்பான 5 இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோகுலம் சிட் ஃபண்ட் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 1,100 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வசூலும்- சர்ச்சையும்:

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மார்ச் 27-ஆம் தேதி ‘எம்புரான்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘எம்புரான்’ திரைப்படத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த மறைமுக திரைக்கதை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மூன்று நிமிட காட்சிகளை நீக்கியதாக படக்குழு தெரிவித்தது.

முல்லை - பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்கிற கருத்துக்கள் இடம்பெற்றுள்ள எம்புரான் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் கொடுத்துள்ள சான்றை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.


ஒருப்புறம் படத்திற்கு இவ்வாறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மறுப்புறம் படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.