Breaking news

அமலாக்கத்துறையை பார்த்து திமுக பயப்படுகிறது – இபிஎஸ் விமர்சனம்

அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை திமுக சொல்லக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 அமலாக்கத்துறையை பார்த்து திமுக பயப்படுகிறது – இபிஎஸ் விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஊழல் செய்வதில் முதன்மையான ஆட்சி

சென்னை தியாகராய நகரில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் முதன்மையான ஆட்சி திமுக தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறது திமுக. சொத்து வரி, குப்பை வரி என வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு. சாதனை சாதனை என கூறும் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதல்வராக்கியது தான். பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்துதான் நிறம் மாறும், ஆனால் அதையும் விட வேகமாக கூட்டணி மாற்றும் கட்சி திமுக தான்.

தமிழகம் சீரழிந்துள்ளது

நீட் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசுதான். நெல்லையில் ஓய்வு பெற்ற காவலர் உயிருக்கு ஆபத்து என புகார் அளிக்கிறார். அவரை காப்பாற்ற ஸ்டாலின் அரசு தவறிவிட்டது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்றால் திமுக தான், ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக. ஸ்டாலின் ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், ஏழைகள் வீடு கட்டவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது, அதிகாரம் மட்டுமே முக்கியம். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் சென்னையை தேர்ந்தெடுத்து விமானத்தில் வந்து திருடி செல்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் குற்றம் செய்ய நினைப்பவர்கள் அஞ்சினார்கள். திமுக ஆட்சியில் எங்கும் ரவுடி ராஜ்ஜியமாக இருக்கிறது. போதைப்பொருள் புழக்கம் குறித்து 3 ஆண்டுகளாக எச்சரித்தும், முதல்வர் கேட்கவே இல்லை. அதனால் தமிழகம் சீரழிந்துள்ளது.

EDயை பார்த்து திமுக பயப்படுகிறது

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. வருமான வரி, அமலாக்கத்துறையை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. 4 ஆண்டு ஆட்சியில் கொள்ளையடித்ததை மறைக்க முடியாததால் வருமான வரி, அமலாக்கத்துறையை பார்த்து திமுக அஞ்சுகிறது. ஊழல் செய்த பணத்தை என்ன செய்வது என தெரியாமல் உள்ள கட்சி தான் திமுக. கூட்டணி வைக்க கோரி எங்களை யாரும் மிரட்டவில்லை. மக்களை சந்திக்கின்ற அளவுக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினீர்கள். அதிமுக - பாஜக மகிழ்ச்சியோடு அமைத்த கூட்டணி இது, இன்னும் பல கட்சிகள் இதில் வந்து சேரும். கூட்டணி வைக்க கோரி எங்களை யாரும் மிரட்டவில்லை.

அதிமுகவிற்கு மடியில் கணம் இல்லை, அதனால் எந்த சோதனைக்கும் நாங்கள் பயம்கொள்ளவில்லை. 2026 தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.அதிமுக - பாஜக மகிழ்ச்சியோடு அமைத்த கூட்டணி இது, இன்னும் பல கட்சிகள் இதில் வந்து சேரும். மக்களை சந்திக்கின்ற அளவுக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினீர்கள்” என கடுமையான சாடினார்.