‘இப்போ வருவீங்கள்ள!’.. பணம் டெபாசிட் ஆகாததால் ஏடிஎம் மெஷினை உடைத்த வாலிபர்

டெபாசிட் செய்த பணம் வங்கி கணக்கில் வராததால் ஆத்திரத்தில் கல்லால் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Oct 5, 2024 - 02:04
Oct 5, 2024 - 02:18
 0
‘இப்போ வருவீங்கள்ள!’.. பணம் டெபாசிட் ஆகாததால் ஏடிஎம் மெஷினை உடைத்த வாலிபர்

சென்னை சைதாப்பேட்டை சேகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (39). இவர் தனியார் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்‌. இவர் கடந்த ஆகஸ்ட் 03ஆம் தேதி அன்று ஜாஃபர்கான் பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் தனது மனைவி பரிதாபானுவின் இந்தியன் வங்கி கணக்கில் 5,500 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.‌ 

அப்போது பணம் டெபாசிட் செய்வதற்கான ரசீது மட்டும் வந்த நிலையில் மனைவியின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதற்கான எந்த தகவலும் வரவில்லை. பின்னர் சாகுல் ஹமீது இந்தியன் வங்கிக்கு சென்று மனைவி வங்கி கணக்கை ஆய்வு செய்த போது 5,500 ரூபாய் டெபாசிட் ஆகவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளனார்.

உடனே சாகுல் பணம் சம்மந்தப்பட்ட ஏடிஎம் மைய அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துடன் ஏடிஎம் மையத்தில் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளருக்கும் தகவல் அளித்துள்ளார். இரண்டு மாதங்களாக தனியார் வங்கி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.‌ இதற்கிடையே கடந்த அக்டோபர் 01ஆம் தேதி அன்று சாகுல் பழைய வீட்டை காலி செய்து விட்டு சைதாப்பேட்டை மாணிக்கம் தெருக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஏடிஎம்மில் டெபாசிட் செய்த பணம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் ஆத்திரமடைந்த சாகுல் நேற்று இரவு பணம் டெபாசிட் செய்த ஏடிஎம் மையத்திற்கு சென்று அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை செங்கல்லால் அடித்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.‌ 

சத்தம் கேட்டு இடத்தின் உரிமையாளர் சம்பத் வெளியே வந்து பார்த்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் குமரன் காவல் நிலைய வேல்ராஜ், ராஜ்குமார் இருவரும் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.‌ மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சென்றது சாகுல் ஹமீது என்பதை கண்டு பிடித்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் டெபாசிட் செய்த பணம் 5,500 வங்கி கணக்கில் வராததது குறித்து புகார் அளித்தும் தனியார் வங்கி அதிகாரிகள் இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தால் அப்போது நேரில் வருவார்கள் என்பதற்காக உடைத்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் சாகுல் ஹமீதிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow