சாலை விபத்தில் வாலிபர் மூளைச் சாவு..உடல் உறுப்பு தானம்!
சாலை விபத்தில் படுகாயமடைந்து வாலிபர் மூளைச் சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளியம்பதி, ஸ்ரீ அம்மன் நகர், பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு - தனலட்சுமி தம்பதியினரின் மகன் ராம்தர்ஷன் (20). இவர் கடந்த 19 ம் தேதி அன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக கார் - பைக் இரண்டும் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, ராம்தர்ஷனின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதைத்தொடர்ந்து ராம்தர்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டன.
ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ராம்தர்ஷனின் உயரிய உடல் உறுப்பு தானத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதல்வர் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து ராம்தர்ஷனின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?






