TVK Vijay Wishes Thaipusam 2025 : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா களைகட்டி உள்ள நிலையில் நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை சுற்றியுள்ள திருமங்கலம், திருநகர், தனக்கன்குளம், நிலையூர், அவனியாபுரம், பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பழநியில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி அதிகாலை சூரிய தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி அரோகரா முழக்கத்துடன் சூரிய பகவானை வணங்கினர். தைப்பூசத்தை ஒட்டி மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேளதாளத்துடன் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மலை மீது பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் மூன்று முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசத் திருநாளை ஒட்டி கும்பகோணம் அருகிலுள்ள முருகப்பெருமானின் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் மூலவர் வெள்ளி கவசம் மற்றும் வைரவேல் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி அதிகாலையில் 4:30 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்குப் பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.