Viduthalai 2 Release Date: வெற்றிமாறனின் விடுதலை 2 ரிலீஸ் தேதி... அஜித்தின் விடாமுயற்சிக்கு செக்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது. அதுவரை காமெடியனாக வலம் வந்த சூரி, விடுதலை படத்தில் லீடிங் ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சூரி, விஜய் சேதுபதியுடன் கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ ஆகியோரும் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து விடுதலை படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், உண்மைச் சம்பவத்தை அப்படியே எடுக்கவில்லை என விமர்சனங்களும் எழுந்தன.
இதனால் ஏற்கனவே விடுதலை 2ம் பாகத்தை முடித்து வைத்திருந்த வெற்றிமாறன், கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் ரீ-ஷூட்டிங் செய்யத் தொடங்கினார். அதோடு விடுதலை 2ம் பாகத்தில், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், கிஷோர், இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோரும் புதிதாக கமிட்டாகினர். இதனையடுத்து விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இது தற்போது முடிவுக்கு வந்துவிட்டதை அடுத்து, விடுதலை 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, விடுதலை 2 இந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. அஜித்தின் விடாமுயற்சி டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக விடாமுயற்சி ரிலீஸாக வாய்ப்புள்ளது. இதனால் உஷாரான விடுதலை 2 டீம், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்துள்ளது. முக்கியமாக விடுதலை 2 இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - கோட் 4வது பாடல் ரிலீஸ் தேதி!
ஏற்கனவே விடுதலை ஷூட்டிங் பாதி முடிந்த பின்னரே, இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்போது விடுதலை 2ம் பாகத்திற்காக நடைபெற்ற படப்பிடிப்பில், மொத்தம் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஃபுட்டேஜ் வந்துள்ளதாம். இதனால் விடுதலை 2ம் பாகத்தை, இரண்டு பகுதியாக ரிலீஸ் செய்ய வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். அதன்படி விடுதலை 2 டிச. 20ம் தேதியும், மூன்றாம் பாகம் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடிய சூரி, மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், விரைவில் மிகப் பெரிய அப்டேட் வரும் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போதைக்கு விடுதலை 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகும் நேரத்தில் விடுதலை 3ம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் விடுதலை 2 ரிலீஸ் தேதி உறுதியாகிவிட்டதால், இன்னும் சில தினங்களில் வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?