மகா கும்பமேளா 2025: பக்தர்கள் கார் மீது பேருந்து மோதி விபத்து.. 10 பேர் உயிரிழப்பு
மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்களின் கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்பதால் உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர்.
நாளுக்கு நாள் திரிவேணி சங்கமத்தில் அதிகப்படியான பக்தர்கள் நீராடி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 48 கோடிக்கு மேல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். சமீபத்தில், குடியரசுத் தலைவர், திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உட்பட பலர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். தொடர்ந்து, திரிவேணி சங்கமத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காரில் உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நோக்கி சென்றுள்ளனர். அப்போது, பிரயாக்ராஜ் - மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து வந்த பேருந்து ஒன்று கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்த நிலையில் 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்தனர். இச்சம்பம் குறித்து தகவலறிந்த உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இதேபோன்று கடந்த வாரம் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் மகா கும்பமேளாவிற்கு சென்று விட்டு திரும்பிய பக்தர்களின் கார் மீது மினி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டத்தில் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பக்தர்கள் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






