TATA IPL 2025: முதல் வெற்றியை பதிவு செய்த RCB.. 7 விக்கெட் வித்தியாசத்தில் KKR- ஐ வீழ்த்தியது!
RCB vs KKR: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.

TATA ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கேப்டனாக பொறுப்பேற்ற தன்னுடைய முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
கேப்டன் ரஹானே
ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். டி காக் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்த நிலையில், ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கொல்கத்தா கேப்டன் ரஹானே பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
Read More: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா..முதல்போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது RCB
103 ரன்கள் பார்ட்னர்ஷிப்
சுனில் நரைனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டிய ராஹானே அரைசதம் அடித்தார். நரைன் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ராசிக் சலாம் பந்து வீச்சில், ஜிதேஷ் சர்மாவிடம் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். கேப்டன் ராஹானே 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் குருணால் பாண்டியா ஓவரில் ராசிக் சலாமிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடிய அஜிங்க்யா ரஹானே மற்றும் சுனில் நரைன் ஜோடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
174 ரன்கள் இலக்கு
அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்த நிலையில், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில், யஷ் தயாள் பந்து வீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 12, ரசல் 4, இரமன்தீப் சிங் 6, ஹர்ஷித் ராணா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜான்சன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக குருனால் பாண்டியா 3, ஹேசல்வுட் 2 விக்கெட்களும் வீழ்த்தினார். மேலும், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா மற்றும் ராசிக் சலாம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஃபில் சால்ட், விராட் ஜோடி அபாரம்
தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டத்தொடங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நாலாப்பாக்கமும் சிதறவிட்டனர். ஃபில் சால்ட் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 56 ரன்களை எடுத்த நிலையில், வருண் பந்து வீச்சில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து இம்பேக்ஸ் ப்ளேயராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 1 பவுண்டரியுடன் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் நிதானமாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்தார்.
சேஸ்மாஸ்டர் விராட்
அடுத்து களமிறங்கிய கேப்டன் இரஜத் படிதார் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். 1 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 59 எடுத்து பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
Read More: TATA IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி.. போக்குவரத்து மாற்றம்..!
What's Your Reaction?






