மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு.. என்னதான் காரணம்? வெளியான தகவல்
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை ஆய்வு செய்ததில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் 12-ஆம் வகுப்பை முடித்ததும் பொறியியல், கலை அறிவியல், கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் அதிக அளவில் சேர்கின்றனர். ஆனால் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரக்கூடிய தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற கருத்து பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இந்த கருத்தை மெய்பிக்கும் வகையில் கடந்த மூன்று கல்வி ஆண்டு புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி 2022, 2023, 2024 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாநில வாரியாக சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை பார்க்கும் போது தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது என்ற புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஐஐடியை பொறுத்தவரை மொத்தம் நாடு முழுவதும் 17,692 இடங்கள் உள்ளன. இதில் கடந்த மூன்று ஆண்டுகளிலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக எண்ணிக்கையில் சேர்ந்திருக்கிறர்கள் . 2022-ஆம் ஆண்டு 2,184 மாணவர்களும், 2023-ஆம் ஆண்டு 2,760 மாணவர்களும், 2024-ஆம் ஆண்டு 2,361 மாணவர்களும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது 13-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2022-ஆம் ஆண்டு 436 மாணவர்களும், 2023-ஆம் ஆண்டு 545 மாணவர்களும் ஐஐடி-களில் சேர்ந்த நிலையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்பட்டு 527 மாணவர்களே சேர்ந்து இருக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு என்பது வெறும் 3 விழுக்காட்டிற்கு உள்ளாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட இதர மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 6,525 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது இடத்தில் தெலுங்கானா, நான்காவதாக ஆந்திரப் பிரதேசம், ஐந்தாவது இடத்தில் மகாராஷ்டிராவும் இடம் பிடித்துள்ளன. இதிலும் தமிழகத்திற்கு 13-வது இடம் தான் கிடைத்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 1,665 தான். 1.75 விழுக்காடு தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வியாளர்கள், "ஐஐடி நிறுவனங்களில் ராஜஸ்தான், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 60 விழுக்காடு இடங்களை எடுத்து விடுகிறார்கள்.
மற்ற 31 மாநிலங்களுக்கு 40 விழுக்காடு இடங்கள் பகிர்ந்து செல்கின்றன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வது குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இருக்கிறது. ஆனல், தமிழக ஆசிரியர்களிடையே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கக்கூடிய அளவிற்கு அவர்களை மேம்படுத்த வேண்டும்” என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரிவாக விடை அளிக்கக்கூடிய வகையிலான தேர்வு முறைக்கு தமிழக மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள் என்றும், அதற்கு மாறாக கொள்குறி வகையிலான விடைகளை அளிக்கும் வகையிலான தேர்வு முறைக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டியது அவசியம் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியை அளிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






