முதல்வராக சொன்னேன், பிரதமராக கேட்டார்.. மோடியை சந்தித்த பின் ஸ்டாலின் விளக்கம்
CM MK Stalin Met PM Narendra Modi : டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
CM MK Stalin Met PM Narendra Modi : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் உரையாடினார். அப்போது, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது.
மேலும், சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது. இனிமையான சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் இருக்கிறது. பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உள்ளேன். நான் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கு நிதி வராததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை தாமதமின்றி மத்திய அரசு விடுவிக்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கைக்கான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுள்ளது” என்றார்.
மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் இலங்கையின் புதிய அதிபரிடம் தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கூறிய ஸ்டாலின், "மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு அளித்தேன். 15 நிமிடம் சந்திப்புக்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில் 40 நிமிடங்களை எனக்காக பிரதமர் ஒதுக்கினார். நான் முதலமைச்சராக சந்தித்தேன், அவர் பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார்” என்றார்.
பின்னர், மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலையே அவர் சென்னை திரும்புகிறார்.
What's Your Reaction?