ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

Jan 8, 2025 - 17:14
 0
ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
அப்பாவு-ஆர்.என்.ரவி

தமிழக சட்டபேரவைக் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று (ஜன 8) நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். அவர் பேசியதாவது,  ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது எக்ஸ் தளத்தில் தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார். அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.  

ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தான் பொறுப்பேற்ற பின்னர் பிரசார் பாரதி நிறுவனத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.பேரவை நடவடிக்கைகளில் வினாக்கள், விடைகள், சட்டமுன்வடிவுகள், தனித்தீர்மானம், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதற்காக 44 லட்சம் ரூபாய் பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பேரவை செயலகத்தால் வழங்கப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஓ.பி வேன் கிடைக்காத காரணத்தால் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என பிரசார் பாரதி தெரிவித்தது.  அவர்களிடம் நேரடியாக அழைத்து கேட்டபோது குஜராத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓ பி வாகனம் அனுப்பி வைக்கப்பட்டதாக சொன்னார்கள்.

ஏற்கனவே இது போன்ற செயல்களால் அவர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், ஆளுநர் உரையாற்ற வருவதற்கு முன்னாள் பேரவையின் அனுமதி இல்லாமல் டிடி தமிழ் கேமிரா போட்டனர். ஆல் இந்தியா ரேடியோவும் கேமிரா போட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆளுநர் வரும் போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது. அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது ? அவ்வாறு அனுமதி பெறாமல் உள்ளே வந்திருக்க கூடாது. ஆளுநர் எக்ஸ் வலைதளப் பக்க பதிவில் நெருக்கடி நிலை, அவசர சிலை என்று சொல்கிறார்.

ஆளுநரை முறையாக அழைத்து வந்தோம். உரையாற்ற புத்தகம் வழங்கினோம். எதிர்க்கட்சியினர் பெரிய பதாகையோடு வந்தனர். ஆளுநரை பேசவிடாமல் ஒட்டுமொத்தமாக தடுத்தது எதிர்க்கட்சி தான். ஆளுநர் இருக்கும் போது இந்த பதாகைகளை கொண்டு வரக்கூடாது என கூறினேன். ஆளுநர் இரண்டு மணித்துளியில் வெளியேறி விட்டார்.

பேரவை தொடர வேண்டும் என்பதற்காகவே அதிமுகவினரை வெளியேற்றினோம். ஆளுநர் வெளியே சென்ற பின்னரும், முதன்மை செயலாளரை அழைத்து ஆளுநரை அழைத்து வர அறிவுறுத்தினேன் என்று கூறினார். சபாநாயகர் விளக்கத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, இது என்ன அவையா ? இந்த அவையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ? அதிமுகவினர் அமர்ந்து பேசுவதென்றால் பேசுங்கள் இல்லையென்றால் வெளியே போங்கள். அவையின் மரபே கெட்டுப்போச்சு என்று அவை முன்னவர் துரைமுருகன் காட்டமாக கூறினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த நிலையிலும் சபாநாயகர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டிய அவசியம் இல்லை. பதாகைகளை ஏந்தி வந்தவர்கள் மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது தான் எனது கேள்வி என்று கூறினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு,  ஆளுநர் உரையின்போது முன்னோ, பின்னோ இடையூறு செய்வது தவறு என்பது பேரவையின் விதி. ஆளுநருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஆளுநர் இருக்கும்போது ஏன் பதாகையை ஏந்தினீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆளுநர் உரைக்கு இடையே இடையூறு செய்வது அவை உரிமை மீறல் செயலாகும். குழப்பம் ஏற்படுத்திய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவருக்கும் ஒரு மித்த கருத்து உள்ளது. இவ்விவகாரத்தை அவை மீறல் உரிமை குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறிய நிலையில் முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க அதிமுகவினர் மீதான நடவடிக்கை திரும்பி பெறப்பட்டது என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow