சினிமா

Kottukkaali: சூரியின் கொட்டுக்காளி எப்படி இருக்கு..? சிவகார்த்திகேயன் முதல் பிரபலங்களின் விமர்சனம்!

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் 23ம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற கொடுக்காளி படத்தை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Kottukkaali: சூரியின் கொட்டுக்காளி எப்படி இருக்கு..? சிவகார்த்திகேயன் முதல் பிரபலங்களின் விமர்சனம்!
Kottukkaali Review

சென்னை: வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி, இப்போது பிஸியான ஹீரோவாக வலம் வருகிறார். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த சூரிக்கு, வெற்றிமாறனின் விடுதலை மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குமரேசன் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்த சூரியின் நடிப்புக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. விரைவில் விடுதலை 2ம் பாகமும் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் ரிலீஸான கருடன் திரைப்படமும் சூரிக்கு ஹீரோவாக நல்ல ரீச் கொடுத்தது.

துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில் சூரியுடன் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூரி லீடிங் ரோலில் நடித்த இத்திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் கோடிகளில் வசூலித்தது. விடுதலை, கருடன் படங்கள் வெற்றிப் பெற்றதை அடுத்து இனி ஹீரோவாக மட்டுமே நடிக்கவுள்ளதாக சூரி அறிவித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இந்த மாதம் 23ம் தேதி ரிலீஸாகிறது. 

இதனையடுத்து கொட்டுக்காளி படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னையில் திரையிடப்பட்டது. அதில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். படத்தை பார்த்துவிட்டு ட்வீட் போட்டுள்ள இயக்குநர் லெனின் பாரதி, “கொட்டுக்காளி... குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம்.. முத்தங்கள் இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ், இப்படியான படைப்பை தயாரித்த சிவகார்த்திகேயன், நடிகர் சூரி உள்ளிட்ட குழுவினருக்கு கோடி நன்றிகள்” என படத்தை பாராட்டியுள்ளார்.

அதேபோல், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கொட்டுக்காளி படத்தை மாஸ்டர் பீஸ் என வெகுவாக புகழ்ந்துள்ளார். சூரி, அன்னா பென், இயக்குநர் வினோத்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். சிவகார்த்திகேயன் ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை தயாரித்துள்ளார். கொட்டுக்காளி படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என ரசிகர்களுக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். அதேபோல், சினிமா விமர்சகர்கள் பலரும் கொடுக்காளி படத்தை பாராட்டியுள்ளனர். கூழாங்கல் போல கொட்டுக்காளி படத்திலும் மேக்கிங்கில் தன்னை நிரூபித்துள்ளார் இயக்குநர் வினோத் ராஜ். நிச்சயம் இந்தப் படம் சூரியின் கேரியரில் இன்னொரு மணிமகுடம் என பாராட்டியுள்ளனர்.

கொட்டுக்காளி படத்தை மூன்று முறை பார்த்த சிவகார்த்திகேயன், சூரியின் நடிப்பை கண்டு மிரண்டுவிட்டாராம். அதேபோல் அன்னா பென், இயக்குநர் வினோத்ராஜ் ஆகியோரையும் பாராட்டியிருந்தார். முன்னதாக இத்திரைப்படம் பெர்லின் உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சூரியும் கொட்டுக்காளி திரைப்படம் குறித்து சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். 

மேலும் படிக்க - ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான்..” - ரஞ்சித்   

இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கணும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.