Actor Ranjith about Honour Killing : கவுண்டம்பாளையம் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுபடி நேற்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. மோகன் ஜி வரிசையில் நாடகக் காதலுக்கு எதிரான படமாக கவுண்டம்பாளையத்தை இயக்கியுள்ளேன் என ரஞ்சித் கூறியிருந்தார். அதேநேரம் இப்படத்தின் ட்ரெய்லரில் சர்ச்சையான வசனங்கள் இருப்பதுடன், விசிக தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் விதமாக காட்சிகளும் வசனங்களும் இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன.
இதனால் கவுண்டம்பாளையம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ரஞ்சித் தரப்பில் சொல்லப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் சென்ற ரஞ்சித், போலீஸ் பாதுகாப்புடன் கவுண்டம்பாளையம் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். இதனையடுத்து சேலத்தில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கவுண்டம்பாளையம் படம் பார்த்த ரஞ்சித், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது நேர்மையான படம். குடும்பத்துக்கான, தாய்மார்களுக்கான படமாக கவுண்டம்பாளையம் இருக்கும். காதலுக்கு எதிரியான படமாக இல்லாமல் நாடகக் காதலுக்கு மட்டுமே எதிராகவும், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் எனக் கூறியிருந்தார்.
முக்கியமாக ஆணவக்கொலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், ”ஆணவக்கொலை வன்முறை அல்ல, அது அக்கறை தான்” எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆணவக்கொலை பற்றி கவுண்டம்பாளையம் படத்தில் பேசியுள்ளேன். யாராவது நமது பைக்கையோ அல்லது செருப்பையோ எடுத்துவிட்டால் நமக்கு கோபம் வருவது இயல்பு. அதேபோல் தான் பெற்றவர்களுக்கும் அவர்களது குழந்தைகள் தான் உயிர். அதனால் அவர்களுக்கு தனது மகளின் எதிர்காலத்துக்கு எதாவது என்றால் எமோஷனலாக முடிவெடுப்பார்கள். எனவே ஆணவக்கொலையை வன்முறையாக பார்க்க வேண்டாம், அது தங்களது மகள்கள் மீதான அக்கறை தான் என தெரிவித்தார்.
மேலும் படிக்க - அந்தகன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆணவக்கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை சரி என்பதாக ரஞ்சித் பேசியுள்ளார். காதலுக்காக பெற்றோர்கள் தங்களது மகள்களை கொலை செய்வதை எப்படி நியாயப்படுத்த முடிகிறது. இதுபோன்று பேசுவது அபத்தம் என்றும், இனிமேல் ரஞ்சித் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். முன்னதாக கவுண்டம்பாளையம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் “நான் சாதி வெறியன்தான்” என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
அப்போதும் தனது கவுண்டம்பாளையம் படத்துக்கு பப்ளிசிட்டி செய்வதற்காக ரஞ்சித் இப்படியெல்லாம் பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று வெளியான கவுண்டம்பாளையம் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. நாடகக் காதலுக்கு என்ற பெயரில் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்கி வைத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.