சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் நேற்று புழல் சிறையில் தீடீரென சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை இன்று அழைத்த நீதிபதிகள் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டதாக தொடர்பாக தங்களது கருத்துகளை நீதிபதிகள் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தியதாகவும் அப்போது சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தபோது முழுமையாக தூய்மையாக இருந்ததாக நீதிபதிகள் கூறினர்.
மேலும், கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பார்த்த போது உணவு தரமானதாகவும், சுவையாகவும் இருந்ததாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கொடுங்குற்றத்திற்காக சிறையில் அடுக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த போது அவர்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்ததாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேலும் சில யோசனைகளை வழங்க இருப்பதாக கூறிய நீதிபதிகள் அது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளதாக என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கின் மூலம் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும், சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சர்வதேச தரத்தில் உயர்த்தியுள்ளதாகவும், கோவை மத்திய சிறையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுவதையும், சிறை பெட்ரோல் நிலையம் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.