தமிழ்நாடு

கார் ஏற்றி இளம்பெண் கொலை: இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!

கோயம்பேட்டில் இளம்பெண்ணை கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் வழக்குப்பதிவு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

கார் ஏற்றி இளம்பெண் கொலை: இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!
Koyambedu Murder
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, இளம்பெண் ஒருவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் வழக்குப்பதிவு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்றிரவு ஏற்பட்ட தகராறில், இளம்பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகச் காவல் துறையினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இதுவரை 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான சுமனின் வாக்குமூலம் மற்றும் பின்னணி

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியப் குற்றவாளியான சுமனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிரடி வாக்குமூலம் கிடைத்துள்ளது. தனியார் பாரில் நடனமாடிக்கொண்டிருந்தபோது, இடுப்பில் கைப்பட்டதன் காரணமாகவே இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளதாக அவன் தெரிவித்துள்ளான். மேலும், கொலையாளிகள் பயன்படுத்திய காரில் திமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது குறித்துப் பேசிய சுமன், தனது மாமா முன்பு 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியில் இருந்ததால், அந்தப் பின்னணியை வைத்துக் காரில் திமுக கொடியைப் பொருத்தியிருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.

4 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு

இக்கொலை சம்பவம் தொடர்பாகச் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். அதன்படி, காயம் ஏற்படுத்துதல், படுகாயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய 4 கடுமையான பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது இறந்த பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அஸ்வத் என்ற இளைஞர் பேசிய வீடியோவில், "நாங்கள் 4 பேர் ஒரே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த கார் எங்களை வேகமாக இடித்தது. நாங்கள் கீழே விழாததால், இரண்டாவது முறையாக மீண்டும் இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றனர். வேறொரு கும்பல் கல் வீசி தாக்கியதை நாங்கள் தான் செய்தோம் என்று தவறாக நினைத்து, எங்களை பழிவாங்க இவ்வாறு காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தனியார் பாருக்குச் சீல் வைப்பு

கொலைச் சம்பவத்திற்குப் பிரதான காரணமாக அமைந்த கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாருக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர். இந்த பாரின் உரிமையாளர் த.வெ.க கட்சியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் த.வெ.க சார்பில் விருப்பமனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.