தமிழ்நாடு

புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு: சைபர் குற்றங்களைத் தடுக்க தனி கவனம் என உறுதி!

தமிழகக் காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு: சைபர் குற்றங்களைத் தடுக்க தனி கவனம் என உறுதி!
Mahesh Kumar Agarwal takes charge as new DGP
தமிழகக் காவல்துறையின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக முழு நேர டிஜிபி நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய முழு நேர டிஜிபியைத் தமிழக அரசு நியமித்துள்ளது.

டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்த மகேஷ் குமார் அகர்வாலுக்கு, நுழைவாயிலில் காவல்துறையின் சார்பில் சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் தனது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்குச் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்க், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தேர்தல் நேரத்தில் டிஜிபியாகப் பணியாற்றிய சந்தீப் ராய் ரத்தோர் தற்போது சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர், சிஐடி - அமலாக்கத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளார்.

பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், "தமிழக மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி" என்று கூறினார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருட்கள் இல்லாத நிலையை உருவாக்குவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் சைபர் கிரைம் குற்றங்களைத் தடுப்பது ஆகியவற்றுக்குத் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

1994-ஆம் ஆண்டு தனது 22-வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்புலனாய்வில் நீண்ட அனுபவம் கொண்டவர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டிருந்த அவர், ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தமிழகக் காவல்துறைக்கே திரும்பிப் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.