ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொண்ட ரஜினிகாந்த், இருதினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். கூலி படத்திற்காக மழையில் நனைந்தவாறு ஒரு காட்சியில் நடித்ததாகவும், அதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அதேபோல், ரஜினிகாந்துக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதேநேரம் ரஜினிக்கு இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்களும் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யவும் மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். அடி வயிறு வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட பிரச்சினைகளும் ரஜினிக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த நாள வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டன்ட் (Stent) பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என ரஜினி தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக வேட்டையன் ட்ரெய்லர் ரிலீஸில் ஏதும் மாற்றம் இருக்குமா இல்லையா எனத் தெரியவில்லை. கோலிவுட் வட்டாரங்களின் தகவல்படி வேட்டையன் ட்ரெய்லர் ரிலீஸில் எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகிறது. ஆனால், கூலி படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது அப்போலோ மருத்துவனை. அந்த அப்டேட்டில், “சூப்பர்ஸ்டாரின் உடல்நலம் அவரைப்போலவே உறுதியானது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய ரஷ்யா!
இந்த நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமுற்று வீடுதிரும்ப வாழ்த்துகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் சீராகத் தேறிவருகிறார் என்பது
நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளா்.