பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. முழு விவரம்
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் பலுச் அமைப்பினர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று (மார்ச் 12) ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது. 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடம் சென்று கொண்டிருந்த இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
இதையடுத்து, பலுச் அமைப்பினர் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறை[ப்பிடித்தனர். அப்போது, ரயிலின் ஒரு சில பெட்டிகளில் பயணம் செய்த பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் பலுச் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 30 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.
பலுச் அமைப்பு அறிக்கை:
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நாங்கள் சிறை பிடித்து உள்ளோம் என்றும் ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள், பயணிகளை விடுதலை செய்துவிட்டோம். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டுமே சிறை பிடித்து உள்ளோம் என்றும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்கள் பிடியில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் கொலை செய்வோம் என்றும் பலுச் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி பேசியதாவது, “ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தப்ப முடியாது" என்று கூறினார்.
பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராணா முகமது கூறியதாவது, “ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதியை ஒட்டிய என்-65 நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவ பகுதி ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையை ஒட்டிய மலைப்பகுதி ஆகும். அந்த இடத்துக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ராணுவ வீரர்கள் முன்னேறி சென்றால் மலைப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் எளிதாக சுட்டு வீழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.
ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தோம். வான் வழி தாக்குதல் நடத்தினால் பயணிகள் பாதிக்கப்படுவர் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். முதல்கட்டமாக ரயில் பயணிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் சம்பவ பகுதிக்கு நிவாரண ரயில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய மற்றொரு ரயிலும் சம்பவ பகுதிக்கு விரைந்திருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
பலுச் அமைப்பின் பின்னணி:
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம் அந்நாட்டின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை கொண்டுள்ளது. 1947-48 ஆம் ஆண்டில் தனி நாடு கோரி இப்பகுதி மக்கள்போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மக்கள் ராணுவத்தின் மூலம் நசுக்கப்பட்டனர். அப்போது 2 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சூழலில் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து கடந்த 1970-ம் ஆண்டில் பலுச் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகிறது.
What's Your Reaction?






