தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அதிரடி காட்டிய தமிழக அரசு!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரப்படும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்பட்டதாக எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அதிரடி காட்டிய தமிழக அரசு!
Tambaram Corporation
தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ.45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகளுக்காக டெண்டர் நடைமுறைகள் முடிவடையும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் புகார் எழுப்பியது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குப் பணிகளை வழங்கி, திறப்பு விழாவும் நடத்தப்பட்ட பின்னரே, அதை முறைப்படுத்துவதற்காக இணையதளத்தில் கண்துடைப்புக்காகப் போலி டெண்டர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

சட்டவிரோதமாகப் பணிகளை முடித்துத் திறப்பு விழா நடத்திய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறப்போர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு விரிவான புகார் மனு அனுப்பப்பட்டது. அதில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரைச் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்கம் வெளியிட்ட ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ். உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி ஆணையர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.