விளையாட்டு

6 மாதங்களில் முடிந்த பந்தம்: பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி!

பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரது காதலி அக்ரிதி அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

6 மாதங்களில் முடிந்த பந்தம்: பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி!
இந்தியக் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரது காதலி அக்ரிதி அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2026 மார்ச் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

தங்கள் பிரிவு குறித்துப் பதிவிட்டுள்ள அக்ரிதி, "எங்களின் எதிர்கால இலக்குகளும் பாதைகளும் வெவ்வேறாக இருப்பதால் கனத்த இதயத்துடன் இந்தப் பிரிவை அறிவிக்கிறோம். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பும் அக்கறையும் கொண்டிருந்தாலும், எங்கள் பாதைகள் இனி ஒன்றாக இணையாது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தற்போதைய பொறுப்புகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இருவரின் சம்மதத்துடன் தனித்தனி வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர், "நாங்கள் இருவரும் வாழ்வில் முன்னோக்கிச் செல்லும்போது நன்மையும், அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும். இந்தத் தர்மசங்கடமான சூழலில் எங்களது தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறும், இந்த முடிவிற்கான காரணங்கள் குறித்துத் தேவையற்ற ஊகங்களையோ, யூகங்களையோ செய்ய வேண்டாம் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்ரிதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிருத்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பகிர்ந்த, 'உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லாத நிலை வரும் வரை உழையுங்கள்' என்ற ஒரே ஒரு பதிவு மட்டுமே தற்போது அவரது பக்கத்தில் உள்ளது. 2021-க்குப் பிறகு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பின்றிச் சவாலான சூழலை எதிர்கொண்டு வரும் பிரித்வி ஷாவுக்கு, இந்தப் பிரிவு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.