விளையாட்டு

அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!

சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!
Ajith Kumar Enters Michelin Le Mans Cup Final
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், சர்வதேச அளவில் நடைபெறும் பிரபலமான கார் பந்தய தொடரான மிச்செலின் லீமென்ஸ் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கார் பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள அஜித் குமார், தனது சொந்த அணியுடன் இணைந்து இந்த சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், அஜித் தனது திறமையான ஓட்டும் திறன் மற்றும் கடினமான பயிற்சியின் மூலம் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெறும் மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) இரவு தொடங்குகிறது. இந்தப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக போட்டி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், மாநிலத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் அறிந்து கொள்வதற்காக சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டிற்கு விஜய் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அஜித் குமார் தனது அணியினருடன் லண்டனில் தங்கி, இந்தப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சர்வதேச அளவிலான போட்டியில் தமிழ் நடிகர் ஒருவர் பங்கேற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிச்செலின் லீமென்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமாருடன் இணைந்து இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர்.

திரையுலகில் மட்டுமின்றி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும் தனது தனித்துவமான பயணத்தை தொடர்ந்து வரும் அஜித் குமாரின் இந்த புதிய சாதனை, ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.