அரசியல்

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெரியார் அறிவுலகம் திறப்பு...
udhayanidhi stalin-cm vijay

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகளுக்கான நூலகம், போட்டித் தேர்வுகளுக்கான பிரிவு, அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவையெல்லாம் திமுக ஆட்சியில் கடந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை மக்களின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் வகையில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அப்போதைய திமுக அரசு அறிவித்தது. தொடர்ந்து, 2024 நவம்பர் 6-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில் நூலகம் கட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தைப் புதிய அரசு திறந்து வைத்து பெருமை தேடிக்கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் இடம்பெற்றிருந்த ‘நான் முதல்வன்’ என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நினைவுக்கு வருகிறார் போல. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இந்தச் சர்க்கஸ் ஆட்சி சதி வேலையில் ஈடுபட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்தை உருவாக்கியதில் திமுக அரசின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், புதிய அரசு திட்டத்தைத் திறந்து வைப்பதோடு மட்டும் பெருமை கொள்வதாகவும் சாடியுள்ளார்.

இதனை கண்டித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, "நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.

வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.

இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்? ‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?  இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா? 

கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை Cancel செய்வது - Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த Dummy முதலமைச்சர் நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்".

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.