உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் ஏற்கெனவே குறைந்த கட்டணத்தில் இணையச் சேவைகளை வழங்கி வரும் முகேஷ் அம்பானியின் ஜியோ, ஸ்டார்லிங்கின் வருகையைத் தடுக்க முயற்சிப்பதாக மஸ்க் குற்றம்சாட்டி வந்தார். இந்திய அரசும் அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர் விமர்சித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு ஏற்கெனவே மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியச் சந்தை மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் குறித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் உண்மைகளைப் பதிவு செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அனுமதிக்காகக் காத்திருக்கும் ஜியோ, ஸ்டார்லிங்க்!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் மட்டுமின்றி, ஜியோவின் செயற்கைக்கோள் இணையப் பிரிவு மற்றும் பார்தி ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் நிறுவனத்துக்கும் சேவைகளை வழங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிறுவனங்கள் எதுவும் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான பாதுகாப்பு அனுமதியை இன்னும் பெறவில்லை.
இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோ, ஸ்டார்லிங்கிற்கு நேரடிப் போட்டியாளராக உருவெடுக்க வாய்ப்புள்ளது. கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இணைய வசதி இல்லாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குச் செயற்கைக்கோள் இணையம் உதவக்கூடும் என்பதால், இந்தியச் சந்தை ஸ்டார்லிங்கிற்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஜியோ வழங்கும் குறைந்த கட்டண இணையச் சேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ஸ்டார்லிங்க் சேவையையும் மலிவு விலையில் வழங்கப்போவதாக மஸ்க் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண டேட்டா சேவைகள் மூலமாகவே ஜியோ இந்தியாவில் தனது ஆதிக்கத்தை வளர்த்துக்கொண்டது. இதே உத்தியைக் கொண்டு கென்யா போன்ற நாடுகளிலும் உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்க மஸ்க் முயன்று வருகிறார்.
இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் பங்கு வெளியீட்டில் 108 பில்லியன் டாலர் மதிப்பீட்டை இலக்காகக் கொண்டுள்ள சூழலில், ஸ்டார்லிங்க் விவகாரத்தில் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி இன்னும் கிடைக்காத நிலையில், அம்பானி - மஸ்க் இடையிலான போட்டி அடுத்தகட்டத்துக்குச் செல்லுமா என்பதுதான் இப்போது தொழில்நுட்பத் துறையின் கவனமாக உள்ளது.
LIVE 24 X 7









