முந்தைய திமுக ஆட்சியை விட தவெக அரசு குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், உண்மைகளை மறைத்துப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திமுக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - திமுக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது திமுக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று திமுக மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், திமுக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்? அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
LIVE 24 X 7









