"நான் அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் தெர்மாகோல் போட்டதை கிண்டல் செய்தீர்கள். இப்போது அமைச்சர் ராஜீவ், நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு தான் காரணம் என்கிறார். அவருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும்" என தனக்கே உரித்தான பாணியில் நக்கல் அடித்திருந்தார் அ.தி.மு.க. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு. இதற்கு ஆளும் த.வெ.க. தரப்பு இன்னமும் எதிர்வினையாற்றிவரும் சூழலில் நாம் அவரிடம் பேசினோம்.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாவது இடத்துக்குகூட வர முடியவில்லையே?
அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில் எத்தனையோ கட்சிகள் டெபாசிட் இழந்திருக்கின்றன. ஆனால், அப்படி எதுவும் இப்போது அ.தி.மு.க.வுக்கு சேதாரம் ஏற்படவில்லை. எங்களுக்கு ஒரு தொகுதியில் 45 ஆயிரம் மற்றும் இன்னொரு தொகுதியில் 47 ஆயிரம் வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்களே தவிர நிராகரிக்கவில்லை. இவ்வளவு அலையிலும் மக்கள், அதிமுக வேண்டும் என்ற உணர்வுடன் பணம் எதுவும் பெறாமல் வாக்களித்திருக்கிறார்கள். இது எங்களுக்கு பலம்தான். பலவீனம் அல்ல."
முதல்வர் விஜய்யை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுகிறார்களே?
'விஜய்யை எங்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது அபத்தம். தி.மு.க.வில் இருந்தபோது 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அப்போது அவர் போய் ஓட்டுக்கேட்கவில்லை. ஆனால், பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் ஜெயித்தார். பிறகு கட்சி துவங்கியவுடன் அருப்புக்கோட்டையில் ஒரே நாள் தான் பிரசாரம் செய்து வெற்றிபெற்றார். 1980ல் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, மதுரை மேற்கில் நின்றார். அங்கே வெறும் 5 நிமிடங்கள்தான் பேசினார், வெற்றி பெற்றார். 1984ல் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியாது. ஆனால், வெற்றிபெற்றார். விஜய் என்ன சாதனை செய்தார்? இவரை ஏன் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை."
முதல்வராக விஜய்யின் செயல்பாடுகள் எப்படி?
"எதையும் பேச மாட்டேன் என்கிறார். பேட்டி கொடுக்க மறுக்கிறார். மேட்டூர் அணையை திறப்பதற்கு சார்ட்டட் ஃபிளைட்டில் போகிறார். அதற்கு 6 கோடி ரூபாய் செலவாகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் போகிறேன் என சொல்லிவிட்டு அங்கு நடந்த அஜித் கார் ரேஸை பார்க்கிறார். தனது அறையைப் புதுப்பிக்க எட்டு கோடி ரூபாய் செலவு செய்கிறார். ஒரு முதல்வராக தன் பாப்புலாரிட்டியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களில் சிறிது மாற்றம் செய்து தனது திட்டம் என்கிறார். இதுதான் அவரது பர்ஃபாமன்ஸ்!"
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் திடீர் ஆலோசனைக் கூட்டம் பற்றி...
தனி மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கிறது த.வெ.கழகம். ஆட்சி அமைப்பதற்கு முன்பு என்ன வேண்டுமானாலும் இக்கட்டான சவால்களை சந்திக்கலாம். ஆனால், ஆட்சி அமைத்த பின்பும் ஒருவித பதற்றத்தில் எம்.எல்.ஏ.க்களை விஜய் அழைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. விஜய் மீது எம்.எல்.ஏக்களுக்கு பிடிப்பு இல்லை என்பதையும், எந்த எம்.எல்.ஏ.வுடனும் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்பதையும் இது காட்டுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது தவெக ஆட்சி நீண்டநாட்கள் நீடிக்குமா என்பது சந்தேகமே"
த.வெ.க. ஆட்சியில் லஞ்சத்தை ஒழித்துவிட்டதாக சொல்கிறார்களே?
'மிகப்பெரிய காமெடி எல்லா அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்தும் ரெய்டில் சுட்டுக்கட்டாக லஞ்சப்பணம் சிக்குகிறது. லஞ்சம் வாங்கி தவறு செய்தவர்கள் யார்? அப்படி சிக்கியவர்கள்மீது தவெக அரசு என்ன நடவடிக்கையை எடுத்தது என்பதை சொல்ல முடியுமா?"
நடிகர் தனுஷ் அ.தி.மு.க.வில் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறதாமே?
"வடிகட்டிய பொய் மீடியாக்கள்தான் இப்படி யூகங்களை கிளப்புகின்றன. தனுஷ் நாளை தனியாக கட்சி துவங்கியவுடன், அ.தி.மு.க.வை தனுஷ் ஏமாற்றிவிட்டார் என செய்தி வெளியிடுவார்கள். லஞ்ச லாவண்யம் இருக்கக் கூடாது. வாரிசு அரசியல் கூடாது போன்ற கொள்கைகளை நம்பி துவங்கப்பட்ட கட்சி அதிமுக நடிகர்களை நம்பி அல்ல."
புகார் கொடுக்க வந்தவரை தாக்கியதாக, துணை சபாநாயகர் ரவிசங்கர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறாரே?
'இதற்கெல்லாம் மக்கள்தான் பதில் சொல்லவேண்டும். இந்த ஆட்சியை தேர்வுசெய்த ஜனநாயகத்தின் மன்னர்களாகிய வாக்காளர்களுக்கு தவெகவினர் தரும் தீபாவளி பரிசு இது. ஆனால், இதையெல்லாம் ஒரு கட்டத்துக்குமேல் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை த.வெ.க.வினர் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு த.வெக. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், விரும்பத்தகாத மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?
இன்னும் போகப்போக பாருங்கள், என்னென்ன நடக்கப்போகிறது என்று! திறனற்ற த.வெ.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. அதன் உச்சமாக தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
த.வெ.க. ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?
இதுகுறித்து ஜோதிடம் எதுவும் சொல்லமுடியாது போகிறப்போக்கை பார்த்தால் சொல் தவெக ஆட்சி ஒரு வருடம் நீடிப்பதே கடினம் தான். மத்திய அரசை எதிர்ப்பதாக முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால் அமைச்சர்களோ பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக சொல்கிறார்கள். மக்கள் ஒரு மாயையில் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள். அதிலிருந்து நிச்சயமாக அவர்கள் வெளியில் வந்துவிடுவார்கள். இனி வரக்கூடிய பொதுத்தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும். அதற்கான வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தடவை விஜய்யிடம் ஏமாந்துவிட்டோம். இனி ஏமாறமாட்டோம்."
LIVE 24 X 7









