கோவையில் முதல்வர் விஜய்யால் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றிருக்கும் வரலாறு காணாத ஊழல் குறித்து ஆளுங்கட்சியான த.வெ.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் மாறி மாறி வைக்கும் குற்றச்சாட்டுகளால் கலங்கி நிற்கிறார்கள் நேர்மையான பதிப்பாளர்கள். இதைத் தொடர்ந்து மொத்த நூலக ஆர்டர்களையும் த.வெ.க. அரசு ரத்து செய்திருப்பதால், 'திருடனை தண்டிக்காமல், மொத்த பதிப்புலகத்தையும் தண்டிப்பதா?' என்று கொந்தளிக்கிறது அறிவுலகம்!
2024 நவம்பர் 6ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் பெரியார் அறிவுலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்து கடந்த அக்டோபர் 16ம் தேதி தற்போதைய முதல்வர் விஜய் நேரில் சென்று அதை திறந்துவைத்தார்.
தொடர்ந்து நவம்பர் 4ம் தேதி கோவை சென்ற ஸ்டாலின், பெரியார் அறிவுலகத்தை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் சேர்ந்து பார்வையிட்டார். அங்கு தி.க. சார்பில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
ஏ.ஐ. புத்தகங்கள்... எழுத்தாளர் பகீர்!
இந்தச் சூழலில்தான், நவம்பர் 6ம் தேதி எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலக நூலத்தின் புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார். 300 ரூபாய் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய புத்தகங்கள் எல்லாம் 1300 ரூபாய் என அதிகமான விலைக்கு வாங்கியிருப்பதாகவும், 'அகல் விளக்கு', 'ஃபீனிக்ஸ்' ஆகிய இரு பதிப்பங்களின் புத்தகங்கள் மட்டுமே 2,000க்கும் மேற்பட்டளவில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அனைத்து புத்தகங்களுமே ஏ ஐயால் உருவாக்கப்பட்டவை என்றும் பகீர் கிளப்பினார்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'தி.மு.கவின் ஏ.ஐ. ஊழல் என்று குறிப்பிட்டு இந்த முறைகேடுகள் குறித்து விரிவாக பேட்டி அளித்தது மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரும் அளித்தார். தி.மு.க. சார்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்புகாரில், இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் ஆர்டர்களை வழங்கிய அதிகாரிகள் யார், புத்தகங்கள் ஒவ்வொன்றாக வாங்கப்பட்டனவா, மொத்தமாக வாங்கப்பட்டனவா, இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன. அதிகாரிகள் யார், இந்த கொள்முதலுக்கு புத்தகத் தேர்வு குழு ஒப்புதல் அளித்ததா போன்ற வினாக்களுக்கு விடை தெரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல. நான்கு குழுக்கள்!
இதுகுறித்து எழுத்தாளர்கள் மத்தியில் பேசினோம். "தமிழகம் முழுவதும் 4,755 நூலகங்கள் உள்ளன. இவற்றுக்கான நூல்கள் கொள்முதலில் குளறுபடிகள் நடக்கக் கூடாது என்பதற்காக வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024 வெளியிடப்பட்டது. அதன்படியே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட ஆறு மாவட்ட நூலகங்களுக்காக நூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை 2025, நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின் படி எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட 137 பேர்கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களில் இருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்த 13 பேர்கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. தேர்வுக்குழு இறுதிப்படுத்தும் நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு, பதிப்பகங்களுடன் பேசி விலையை நிர்ணயம் செய்ய ஐவர் கொண்ட பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டது. இம்மூன்று குழுக்களின் பரிந்துரைகளையும் ஆய்வுசெய்து ஒப்புதல் வழங்க மற்றொரு ஐவர் கொண்ட உயர் ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது.
எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கடந்த அக்டோபர் 17 அன்றும், ஓவியர் சுந்தரன் முருகேசன் கடந்த அக்டோபர் 24 அன்றும் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவுகளும், எழுத்தாளர் பெருமாள் முருகன் இணையத்தில் நவம்பர் 6ம் தேதி வெளியிட்ட பதிவும், நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கின்றன. இத்தனைக் குழுக்கள் இருந்துமே எப்படி இது நடந்தது என்பதுதான் அதிர்ச்சி.
மோகன் வாய் திறப்பாரா?
'ஃபீனிக்ஸ்' பதிப்பகத்துக்கு புத்தக பர்சேஸ் ஆர்டர் கடந்த பிப்ரவரி 13ம் தேதியும், 'அகல் விளக்கு' பதிப்பகத்துக்கு புத்தக பர்சேஸ் ஆர்டர் கடந்த பிப்ரவரி 14ம் தேதியும் கொடுக்கப்பட்டிருப்பதை த.வெ.க. ஐ.டி விங் வெளியிட்டிருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகனும் வெளியிட்டார். இரண்டு பதிப்பங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் ஒரே முகவரியில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 'அகல்விளக்கு பதிப்பகத்தின் முகவரி, கூடுதலாக சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டின் முகவரியாகவும் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. மோகன் என்பவர் தனிநபராக அதை நடத்துகிறார். அவரை தற்போது போலீஸார் விசாரித்துவருவதாகச் சொல்கிறார்கள். இவர் வாய் திறந்தால்தான் சிக்க வேண்டியவர்கள் சிக்குவார்கள்.
பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் இன்னசென்ட் திவ்யா இதுகுறித்து துறைரீதியான விசாரணையை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இயக்குநரான ஜெயந்தி ஐ.ஏ.எஸ். பொது நூலகத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு வகித்துவந்த நிலையில், தற்போது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அப்போதைய முதல்வரின் செயலாளராக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். ஏற்கெனவே, தனியார் பள்ளி அங்கீகார முறைகேட்டில் சிக்கி, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்கிறார்கள். முழுமையான விசாரணை மேற்கொண்டால்தான் உண்மை வெளிப்படும்" என்றனர்.
கண்டதை வாங்கிக் குவித்த அதிகாரிகள்?
இந்த நிலையில் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என 165 பேர் கூட்டாக இணைந்து, இந்த நூல் கொள்முதல் முறைகேட்டிற்கு எதிரான கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இக்கூட்டறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம். "புத்தகங்களைப் பரிந்துரை செய்யும் முதல் குழுவில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளனர். அதற்கடுத்த தேர்வுக்குழுவிலும், பேச்சுவார்த்தைக் குழுவிலும் முழுக்க அரசு அதிகாரிகள்தான் உள்ளனர். இறுதியாக ஒப்புதல் கொடுக்கும் உயர் ஆய்வுக்குழுவில் அதிகாரிகள், எழுத்தாளர்கள் இரு தரப்புமே இருக்கிறார்கள்.
137 பேர் கொண்ட முதல் குழுவினரின் பட்டியலைப் பார்த்த வரை அவர்கள் யாரும் அகல் விளக்கு, 'ஃபீனிக்ஸ் பதிப்பங்களின் புத்தகங்களுக்கு ஓகே சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தமிழ்ச்செல்வன். அழகிய பெரியவன் உள்ளிட்டோர் 'நாங்கள் இந்த புத்தகங்களைத் தேர்வுசெய்யவில்லை' என்று சொல்லிவிட்டனர். தேவையான அளவுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்தும் ஒதுக்கப்பட்ட தொகை மீதம் இருக்கிறது என்றால், கண்ட புத்தகங்களையும் அதிகாரிகள் வாங்கிக் குவிக்கும் சூழல் இருப்பதை மறுக்க முடியாது. அதுதான் இங்கும் நடந்திருக்கும்.
எழுத்தாளர்களுக்கு அனுப்பிய கூகுள் ஸ்ப்ரெட்ஷீட் (Google Spreadsheet) எழுத்தாளர்கள் அனுப்பிய பரிந்துரை, நடத்தப்பட்ட இணையவழிக் கூட்டம், தேர்வுசெய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இறுதிபடுத்தப்பட்ட விலை, அதுதொடர்பான கடிதப் போக்குவரத்து, உயர் ஆய்வுக்குழுவின் இறுதி பரிந்துரை, அரசு பணம் விடுவித்தது எல்லாமே இணையவழியில்தான் நடந்திருக்கிறது. பெரிய தேடுதல் இல்லாமல், ஒரு பொத்தானை அழுத்தினால் எல்லாமே தெரிந்துவிடும். இதை ஏன் அரசு வெளியிட மறுக்கிறது என்று புரியவில்லை? அரசின் நூல்கள் கொள்முதல் கொள்கையும் சரி, அரசாணை எண் 250ம் சரி. இரண்டையும் பார்க்கையில் சிறிய அளவில்கூட கசிவு நடக்க வாய்ப்பில்லை. எனினும் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல எனும் அளவுக்கு இதில் முறைகேடு செய்ய முடியும் என்றால் அது அதிகாரிகளால் மட்டும்தான் முடியும்" என்றார்.
பரிந்துரைக்க மட்டுமே முடியும்!
இந்த முறைகேட்டை வெளிக்கொணர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் பேசுகையில், "புத்தகங்களை நேரில் பார்த்ததை வைத்துதான் அக்கட்டுரையை எழுதினேன். மேற்கொண்டு உள்ளே சென்று ஆராய்ச்சி செய்ய எனக்கு வாய்ப்பில்லை. பின்னணியில் நடந்தது எனக்குத் தெரியாது. நானும் அக்குழுவில் இருந்தேன், குழுக் கூட்டம் ஆன்லைனில் மட்டுமே நடக்கும். யாரையும் நேரில் சென்று சந்திக்கும் வேலை இல்லை. நாங்கள் கொடுக்கும் பரிந்துரையை என்ன செய்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது" என்று முடித்துக்கொண்டார்.
நீளும் பட்டியல்!
இறுதியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மத்தியில் விசாரித்தபோது, வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கிவிட்டோம் இந்த புத்தக முறைகேடு பெரியார் அறிவுலகத்தோடு முடியவில்லை. மதுரையில் திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் இதேபோல ஏ.ஐ. புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி, விரைவில் அறிவுலகம் சேலம் பாரதிதாசன் அறிவுலகம்.
கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகியவற்றிலும் இதே கூத்து அரங்கேறியிருக்கலாம். முதற்கட்டமாக அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம் உள்ளிட்ட பெரிய நூலகங்களில் புத்தகக் கொள்முதல் குறித்த ஆவணங்களைப் பெற்று சரிபார்க்கையில், அங்கும் போலி புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. ஊழல் விவகாரம் அனுமார்வால்போல நீண்டுகொண்டே செல்கிறது. முழுமையான விசாரணை முடிந்த பின்னரே உண்மைத்தன்மை வெளிப்படும்" என்றனர்.
திறக்கப்படவிருக்கும் திருச்சி காமராஜர் அரசின் கருத்தறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை பலமுறை தொடர்புகொண்டும் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அறிவுத் திருட்டை நடத்தியவர்கள் சிக்குவார்களா?
LIVE 24 X 7









