ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், மதிமுகவின் நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் இரு கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் விஜயைக் தினமும் விமர்சிக்காமல் காலை உணவு கூட உண்பதில்லை. அமைச்சரவையில் இருந்துகொண்டே அரசைத் தாக்கிப் பேசுகிறார்கள். கூட்டணியில் மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டும்தான் அரசை விமர்சிக்காமல் ஆதரவாகச் செயல்படுகின்றன" என்று காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மறைமுகமாகச் சாடியிருந்தார்.
வைகோவின் இந்த விமர்சனத்திற்குச் பதிலளித்துப்பேசிய பெ.சண்முகம், "கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அரசின் தவறைச் சுட்டிக்காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. அரசை நாங்கள் விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமையில்லை" என்று கூறினார்.
மேலும், "அரசை விமர்சிக்கக் கூடாது என்பது மதிமுகவின் சொந்த நிலைப்பாடு. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக மதிமுகவின் நிலைப்பாட்டை நாங்களும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பெ.சண்முகம், "அனைத்து விஷயங்களையும் திமுக மற்றும் தவெக இடையிலான பிரச்சனையாக மட்டுமே பார்ப்பது பயன் தராது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையே முதன்மையாக அணுக வேண்டும். நவ தாராளமயக் கொள்கையைப் பின்பற்றியதே திமுகவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசும் அதே பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
LIVE 24 X 7









