புகார் தெரிவிக்க வந்தவரை தாக்கிய துணை சபாநாயகர்? தீயாய் பரவும் வீடியோ!

புகார் தெரிவிக்க வந்தவரை தாக்கிய துணை சபாநாயகர்? தீயாய் பரவும் வீடியோ!

திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முறையிட்ட நபரைத் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Author: Christon அரசியல்

திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைச் சபாநாயகருமான ரவிசங்கர், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பைப் பிரச்னை குறித்து முறையிட்ட நபர் ஒருவரை அடித்து விரட்டியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு குறித்துக் கேள்வி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசுவதற்காகத் தனது தொகுதி எம்.எல்.ஏ-வை அவர் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வைரலாகும் வீடியோ 

தீபாவளிப் பண்டிகை நாளான நேற்று (நவ.8) சொந்த வேலை காரணமாக மணச்சநல்லூர் பகுதிக்குச் சென்ற கார்த்திக் குமார், அங்கு வசிக்கும் துணைச் சபாநாயகர் ரவிசங்கரைச் சந்தித்துள்ளார். அப்போது தனது பகுதியில் உள்ள அடிப்படைச் சிக்கல்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது ரவிசங்கர் அந்த நபரைத் திட்டி, உதைத்து விரட்டுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், அந்த வீடியோ வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அதில் இருப்பவர்களின் முகங்களோ அல்லது பேசுபவர்களின் குரலோ தெளிவாக அடையாளைங் காண முடியாத வகையில் உள்ளது.

சர்ச்சை - விளக்கம்

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபரான கார்த்திக் குமார் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான வெளியான வீடியோவில், துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக பரவும் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டின் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதே தவிர வேறொன்றும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.