காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில், தற்போதைய தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகி வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், கடந்த 14 ஆம் தேதி அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது மனைவி சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் முத்து மற்றும் தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையைக் கையிலெடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் அந்த மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற பாலகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடலில் 5 ரத்தக் காயங்கள் இருந்ததும், கழுத்திற்குக் கீழே ஊசியால் குத்தியது போன்ற 3 காயங்கள் மற்றும் முதுகிலும் காயங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், கழுத்தின் இருபுறமும் சாய்வான கயிற்றுத் தடமும், மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவுடன் இதயம், நுரையீரல்களிலும் வீக்கம் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாலகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில், "மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் என்பவரின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
LIVE 24 X 7









