அரசியல்

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி? சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்!

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி? சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்!
ADMK
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு, தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே சுமுகமான சமாதானப் பேச்சுவார்த்தையாக உருவெடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த அ.தி.மு.க, அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு, இ.பி.எஸ் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். சட்டமன்றத்தில் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி தவெக அரசுக்கு ஆதரவளித்ததால், அவர்களது ஆதரவாளர்கள் 36 பேரின் கட்சிப் பதவிகளைப் பொதுச்செயலாளர் இ.பி.எஸ் பறித்தார்.

இதற்கிடையே, தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் எனச் சி.வி.எஸ் - எஸ்.பி.வி தரப்பு எதிர்பார்த்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தவெக அவர்களை அமைச்சரவையில் சேர்க்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த அணி, மீண்டும் இ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.

தற்போது இரு தரப்பிற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இதன்படி, தேர்தல் ஆணையம் மற்றும் சட்டமன்றச் சபாநாயகரிடம் இரு அணியினரும் பரஸ்பரம் அளித்த புகார்கள் மற்றும் மனுக்களைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இருதரப்பிலும் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், மோதல் போக்கின் காரணமாக இ.பி.எஸ்-ஸால் நீக்கப்பட்ட 36 மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பழைய பொறுப்புகளை வழங்குவது குறித்தும் இருதரப்பு மூத்த தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.