அரசியல்

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!
Police Investigation
தவெக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் விடிய விடிய கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்த திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் தங்களது காவலில் எடுத்துள்ளனர். இவர்களைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து, தனித்தனி அறைகளில் அமரவைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த கூட்டுச் சதிப் பேரத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டதில் நரேஷ் என்பவருக்கு மிக முக்கியப் பங்கு இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கியக் குற்றவாளியான நரேஷிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பித் துளைத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூரிலிருந்து பேசிய 'லட்சுமண பெருமாள்' என்பவர் யார்? பேரத்தின் பின்னணியில் உள்ள அந்த மர்ம நபர் யாருடைய ஆள்? என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்குள் பேசிக்கொண்ட செல்போன் ஆதாரங்களை அழித்தது யார், சொகுசு நட்சத்திர ஓட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளை எப்படி, யார் உதவியுடன் அழித்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த குதிரை பேரத்திற்குப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்று முழுமையாக உதவி செய்திருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தனியார் நிறுவனம் எது, அதன் உரிமையாளர்கள் யார், அவர்கள் மூலம் கைமாறிய பணப் பரிவர்த்தனைகள் என்ன என்பது தொடர்பான ஆவணங்களையும் டிஜிட்டல் ஆதாரங்களையும் தனிப்படை போலீசார் தற்போது திரட்டி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில், தமிழக அரசியலில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.