சினிமா

Jason Sanjay Interview: அப்பா தான் நினைவுக்கு வருகிறார்..! தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Jason Sanjay Interview: அப்பா தான் நினைவுக்கு வருகிறார்..! தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
Jason Sanjay
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை லைக்கா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் திரைக்கு வந்ததால், 'சிக்மா' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து தொடர்பான செய்திகளில் ஜேசன் சஞ்சய்யின் பெயரும் பேசப்பட்டது. தந்தை மீதுள்ள கோபத்தால் அவர் தனது பெயருக்கு முன்னால் தாயாரின் பெயரின் முதல் எழுத்தான 'S' என்பதைப் பயன்படுத்தத் தொடங்கியதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தனது தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் முதன்முறையாகப் பேசியுள்ளார். "சிக்மா படம் வெளியான பிறகு, ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்து படம் இயக்கச் சொன்னால் இந்தியாவில் இருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள்?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா தான், அது ஒரு நல்ல கூட்டணியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.

மேலும் தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த அவர், "நான் சென்னையில் தான் வளர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தேன். சிறுவயது முதலே படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றதால் சினிமா எனது விருப்பமாக மாறியது. ஆரம்பத்தில் பைலட்டாகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ ஆக விரும்பினேன். அப்பா விஜய்யுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்த நினைவுகளும் உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.