சினிமா

Sardar 2 Movie Review: கார்த்தியின் ஸ்பை த்ரில்லர் வெற்றி பெற்றதா?

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின் நிறை, குறைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!

Sardar 2 Movie Review: கார்த்தியின் ஸ்பை த்ரில்லர் வெற்றி பெற்றதா?
sardar 2 movie review
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டணி முந்தைய பாகத்தில் கொடுத்த வெற்றியை இந்த பாதத்திலும் தக்க வைத்தார்களா, இல்லையா? விரிவாக பார்போம்.


இந்தியாவின் 140 கோடி மக்களின் உயிருக்கு உலைவைக்கும் பயோ வெப்பன்... ஜப்பான் கண்டுபிடிப்பு... அதற்கு மூன்று சாவி. அது இருந்தால் தான் அது வேலை செய்யும். மூன்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் இருக்கிறது. அதை கைப்பற்றி அந்த வெப்பனை ஆக்டிவேட் பண்ண நினைக்கிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா... அப்பா சர்தார் கார்த்தியும், அவரது மகன் இளம் கார்த்தியும் அதை எப்படி தடுக்கிறார்கள்? என்பதுதான் கதை... 


ஆன்டி பயாடிக் மாத்திரைகளை பல்லி மிட்டாய் மாதிரி இஷ்டத்துக்கும் சாப்பிடாதீர்கள். அப்படி சாப்பிட்டால் இன்னும் 30 வருஷத்தில் மொத்த பேருக்கும் சொர்க்கத்தில் இடம் உத்தரவாதம்... என்பது மக்களுக்கு இயக்குநர் பி.எஸ் மித்ரன் உபரியாக சொல்லும் மெஸேஜ். அதற்கு அவர் கதைக்குள் திணித்திருக்கும் கதை கொஞ்சம் காமெடிதான்...


சர்தார் சீனாவில் இறந்துவிட்டாரா, இல்லை இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்கிற கேள்வியுடன் துவங்கும் திரைக்கதையில் யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று எதுவும் இல்லா விட்டாலும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது. பிரம்மாண்டத்திற்கும் குறைவில்லை. 


கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே சூர்யா, யோகிபாபு, நிழல்கள் ரவி, ரஜிஷா விஜயன் என அனைவரும் சிறப்பாக  நடித்திருக்கின்றனர். ஃபிளைட், மற்றும் வந்தே பாரத் ரயிலில் நடக்கும்  சண்டை காட்சிகள் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு நிகராக இருக்கிறது. சாம் சி. எஸ். பின்னணி இசை மிரட்டல்.


ஒளிப்பதிவு, எடிட்டிங் சுமார். நிறைய மிஸ் ஃபிரேமிங், எராட்டிக் காமிரா ஜெர்க்... நிழல்கள் ரவி, யோகி பாபு வரும் ஆரம்பக் காட்சிகள் காமெடி என்றாலும் இழுவை. ஸ்பை த்ரில்லரில் வில்லேஜ், வேல் சமாச்சாரமெல்லாம் ஒட்டவில்லை. 


வில்லன் எஸ்.ஜே. சூர்யாவிடம் பயோ வெப்பனும் இல்லை, அதற்கான சாவியும் இல்லை, துப்பாக்கியோடு அம்பது அடியாட்கள் மட்டும் தான் இருக்கின்றனர். அவரை பார்த்து இந்திய உளவுத்துறையே நடுங்குகிறது... 


ஒரு மலைகிராம சிறுவன் எந்த கிருமியால் தன் குடும்பத்தை இழந்து பாதிக்கப்பட்டானோ அதே கிருமியை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு அதை கைப்பற்றி, ஒரு புதிய வடிவத்தையும் உருவாக்கி இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறான். ஆனால் இந்திய உளவுத் துறையும் விஞ்ஞானிகளும் அதுவரை சர்தார் உயிருடன் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...


சர்தார் 2 - சாப்டர் ஓவர்


(இளையரவி)