சினிமா

இளையராஜா சொத்துக்கள் முடக்கம்? சுடுபுடிக்கும் காப்புரிமை விவகாரம்!

இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இளையராஜா சொத்துக்கள் முடக்கம்? சுடுபுடிக்கும் காப்புரிமை விவகாரம்!
Saregama vs Ilaiyaraaja
இசையமைப்பாளர் இளையராஜா தொடர்பான காப்புரிமை விவகாரம் மீண்டும் நீதிமன்ற கவனத்திற்கு வந்துள்ளது. சரிகம இசை நிறுவனம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இளையராஜாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்குச் சொந்தமான காப்புரிமை பெற்ற பாடல்களை நீதிமன்ற உத்தரவை மீறி பயன்படுத்துவதாகவும், அந்த பாடல்களுக்கு உரிமை கோருவதாகவும் சரிகம நிறுவனம் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு :

சரிகம நிறுவனத்திற்கும் இளையராஜா தரப்பிற்கும் இடையேயான காப்புரிமை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி, சரிகம நிறுவனத்திற்கு உரிமையான பாடல்களை இளையராஜா அல்லது அவரது சார்பில் செயல்படும் நபர்கள் பயன்படுத்தவோ, பிறருக்கு உரிமம் வழங்கவோ, மூன்றாம் தரப்பினரிடம் உரிமை கோரவோ இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

தடையை நீக்க கோரிய மனு தள்ளுபடி :

இந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை கடந்த ஜூலை மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தொடர்ந்து பாடல்களை பயன்படுத்தி வருவதாக சரிகம நிறுவனம் குற்றம்சாட்டி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

டிஜிட்டல் தளங்களில் பயன்படுத்துவதாக புகார் :

சரிகம நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், இளையராஜா தரப்பினர் தங்களுக்கு சொந்தமான பாடல்களை யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தங்களின் வணிக உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடல்களின் பயன்பாடு தொடர்பாக ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நிலையான தடை உத்தரவு கோரிக்கை :

தங்களது பாடல்களை எதிர்காலத்தில் இளையராஜா தரப்பினர் பயன்படுத்த முடியாத வகையில் நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சரிகம நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது.

மேலும், ஏற்கனவே "முரட்டுக்காளை" திரைப்பட பாடல் தொடர்பான விவகாரத்தில் இளையராஜா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை சுட்டிக்காட்டிய சரிகம, இதே விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரிக்கை :

நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறப்படும் நடவடிக்கைகளுக்காக இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவரை ஏற்பட்ட இழப்புகளுக்கான நடவடிக்கையாக அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சரிகம நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது.

அத்துடன், சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரியை நியமித்து அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு நோட்டீஸ் :

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் கோரிக்கைகள் தொடர்பாக இளையராஜா தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.