அரசியல்

இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம்.. தமிழ்நாட்டை வரிக்காகதான் வைத்துள்ளார்கள்- சீமான்

நாட்டை பொறுத்தவரை இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம்.. தமிழ்நாட்டை வரிக்காகதான் வைத்துள்ளார்கள்- சீமான்
சீமான்

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் இருந்து நாட்டு மக்கள் கைது செய்து கைவிலங்குடன் அனுப்புவதை பார்க்கிறோம். இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார். இந்த நாட்டிற்கு ஏற்படும் அவமானம் முதன்மை பொறுப்பாளராக உள்ள மோடியை தான் சாரும். அது ஒரு குறியீடாக போட்டு உள்ளனர். நாட்டு குடிமக்களுக்கு கைவிலங்கு போட்டதை விட இது ஒன்றும் அசிங்கம் இல்லை.

இதை கூட சகித்து கொள்ள முடியாமல் உயர்ந்த பதவிக்கு வந்தால் எப்படி. இதை பெரிய குற்றமாக சொல்லுகின்றனர். எந்த கருத்தையும் சொல்ல கூடாது என்றால் ஜனநாயகம், சர்வாதிகாரம் கிடையாது கொடுங்கொன்மை என்று பெயர். இது போல் செய்யாதீர்கள் என்று கடிதம் அனுப்பி இருக்கலாம். வலைதள பக்கத்தை முடக்குவது நல்ல அனுகுமுறை அல்ல. 

இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஏற்புடைதல்ல. உலகின் தொன்மையான மொழி தமிழ். பல்வேறு தேசிய மொழி இனங்கள் உள்ளன. தமிழில் இருந்து பிரிந்து சென்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உருவானது. இந்தி உருவாகி 500 ஆண்டுகள் கூட தொடவில்லை. அந்த மொழியை நாட்டின் பொது மொழியாக மாற்ற முயற்சிப்பது கொடுமை. நாட்டு பற்று என்பது ஒரு மொழியை திணித்து உருவாக்குவதல்ல. 

நாட்டுப்பற்று வர வேண்டும் என்றால் நீர் பெற்று தர முடியுமா? மீனவர்கள் கைது செய்து அவமானப்படுத்தப்படுகின்றனர். எல்லவற்றையும் சிதைத்து அழித்து ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம், ஒரே மதம் என கொண்டு வருவது பேராபத்தானது. இது ஏற்புடைதல்ல. நாட்டின் உறுதித்தன்மையை சிதைக்கும். தேவையில்லாமல் திணிக்க பார்க்கின்றனர். முதன் முதலாக இந்தியை திணிக்கும் போது தமிழ் நாட்டில் தான் கிளர்ச்சி வந்தது. மும்மொழி என்பது ஏற்புடைதல்ல. 

தாய் மொழி, வழிப்பாட்டு மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதுவே போதுமானது. இந்தி மட்டும் அல்ல ஜெர்மன், பிரஞ்ச் உள்பட எந்த மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். ஜெர்மன் பல மாநிலங்களில் 2-வது மொழியாக உள்ளது. தேவை என்றால் கற்று கொள்ளலாம். கட்டாயம் என்பது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பாக இருக்காது. அதிகாரம் இருக்கிறது என்பதால் செய்ய பார்ப்பதா. தமிழ் நாட்டு முதலமைச்சர் மும்மொழி கொள்கையை திணிப்பதாக சொல்கிறார். 

மும்மொழி திணிப்பு, புதிய கல்வி கொள்கையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? பாஜக திணிக்கிறது காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? இந்தியை திணிக்கும் போது போரிட்டோம். ஆட்சிக்கு வந்த பின் யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி வந்து விட்டது. எல்லா திட்டங்களும் இந்தி பெயரில் வந்து உள்ளது. கேலோ இந்தியா என்ற பெயரில் தான் போட்டியை தம்பி உதயநிதி நடத்தினார். 

எல்லா இடங்களிலும் இந்தி வந்துவிட்டது. அவர்கள் நடத்தும் பள்ளி கூடங்களில் 2-வது இடத்தில் இந்தி உள்ளது. பிற மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களும், ராணுவத்தில் சேர்பவர்களும் இந்தியை கற்று கொண்டா சென்றார்கள். தேவை இருப்பின் கற்று கொள்வார்கள். படித்தே தீர வேண்டும் என்பது கஷ்டம். இது நல்ல அனுகுமுறை கிடையாது.  நாட்டை பொறுத்தவரை இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள் தான். 

தமிழ் நாட்டை நிலத்திற்காகவும், வரிக்காகவும் தான் வைத்து உள்ளார்கள். நமக்கு உணர்வு உரிமை இருக்கிறது என்பது பற்றி கவலை கிடையாது. வரி வேண்டும். நிலத்தின் வளம் வேண்டும். பிகாருக்கு நிதி தந்தது நிதிஷ்குமார் ஆதரவு வேண்டும். ஆந்திராவிற்கு நிதி தந்தது அவர்களின் ஆதரவு வேண்டும். மத்திய அரசு பராபட்சமாக செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. அவ்வளவு நேர்மையாக இருப்பவர்கள் தமிழ் நாட்டு வரியை விட்டு விட வேண்டியது தானே. வரியை எங்களிடம் தந்து விட்டால் பிறகு ஏன் கையேந்த வேண்டும். 

மத்திய அரசுக்கு என்று நிதி வருவாய் பெருக்கம் எது. ஒவ்வொரு மாநிலமும் கொடுக்கும்  நிதி வருவாய் தான். இதை முறைப்படி திருப்பி அனுப்ப வேண்டும். தரமுடியாது என்று சண்டியர் தனம் செய்ய கூடாது. வரி தரமுடியாது என்று சொன்னால் ஆட்சியை கலைப்பீர்கள். மறுபடியும் தேர்தல் வந்தால் யார் ஜெயிப்பார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நிற்பவர்கள் தான் வெல்ல முடியும். தேவையில்லாத சேட்டை. இது மாதிரியான ஆட்கள் தான் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் தேச துரோகிகள். 

ஜனநாயகமும் தேச பற்றும் தமிழர்களுக்கு மட்டும் தானா மற்றவர்களுக்கு கிடையாதா. முறையாக வருவாயை பிரித்து தருவதில்லை. இந்தி பேசுபவர்கள் தான் இந்திய குடிமகன். அப்போ நாங்கள் எல்லாம். இது சரியான போக்கு இல்லை நாட்டை ஆளுகின்ற தலைமை, இறைவன் போல் பொதுவாக இருக்க வேண்டும். காற்று, மழை, சூரிய ஒளி போல் இருக்க வேண்டும். இந்தி பேசுபவர்கள், இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாமிய மதம் இந்த மாநிலம், அந்த மாநிலம் என்று இருந்தால் நல்ல தலைமைக்கு அழகில்லையே. 

நாங்கள் வந்தால் இந்த மாநிலத்திற்கு நிதி தருவோம். இந்த மதத்திற்கும் தான் சேவை செய்வோம் என சொல்லி தேர்தலை சந்திக்கவில்லையே. சிறுபான்மை மக்களுக்கு ஜிஎஸ்டி வரியில் குறைவாக வைத்து இருக்கிறோமா, இஸ்லாமியர்கள் வரி இணிக்கும் ஆனால் உரிமை எதுவும் தந்து விடகூடாது. 2040, 2060 என கற்பனை செய்து வருகிறார்கள். 100-வது சுதந்திர தினத்திற்கு நாட்டை வைத்து இருப்பீர்களா. 90 விழுக்காடு விற்று விட்டீர்கள். ஏர்போர்ட் யாருடையது. அதானி பெயரில் எல்லாம் வந்து விட்டது. 

ராணுவ தளவாடங்களில் 100 விழுக்காடு அந்நிய முதலீடு வந்து விட்டது. போர் விமானங்கள், பிரங்கி என எல்லா நாட்டில் இருந்தும் வாங்கி கொண்டு எந்த நாட்டுடன் போர் செய்து எங்களை காப்பாற்ற போகிறீர்கள். கல்வி, மருத்துவம் என எல்லாம் தனியார் மையம். ரோட்டை கூறு போட்டு விற்றது போல் நாட்டையும் விற்ற பின் எங்கிருக்கிறது தேசப்பற்று.

வட மாநிலங்களில் கும்பமேளா கூட்ட நெரிச்சல் விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிக்கிறார். தூத்துக்குடி பேரிடரில் பலியானவர்களுக்கு பிரதமர் வருத்தம் சொன்னாரா. இதன் முலம் அவர்களின் பார்வையை அறிந்து கொள்ள முடியும். தமிழ் நாட்டின் வளத்தை எல்லாரும் பகிர்ந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.