சென்னை: என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. தொடர்ந்து சோலையம்மா, தாய் மனசு, என் ஆசை ராசாவே, தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை, ட்ரீம்ஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளான தனுஷும் செல்வராகவனும், தற்போது கோலிவுட்டில் மாஸ் காட்டி வருகின்றனர். இந்நிலையில், முதன்முறையாக கஸ்தூரி ராஜா நடிகராக அறிமுகமாகியுள்ளார். மீரா கதிரவன் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி வெளியிடும் ஹபீபி படத்தில், லீடிங் ரோலில் நடித்துள்ளார் கஸ்தூரி ராஜா.
அவள் பெயர் தமிழரசி, விழித்திரு படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மீரா கதிரவன், தற்போது ஹபீபி படத்தை இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் என்றாலும், இத்திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தமிழகத்தின் தென்பகுதியான கடையநல்லூர் மக்களின் வாழ்வியலை பின்னணியாக வைத்து ஹபீபி உருவாகியுள்ளது. முக்கியமாக தமிழில் முதல் இஸ்லாமிய வாழ்வியல் சினிமாவாக ஹபீபி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஹபீபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ், பாண்டிராஜ், பா ரஞ்சித், லிஜோ ஜோஷ் பெல்லிசேரி, கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான், சீனு ராமசாமி, சேரன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், லீனா மணிமேகலை ஆகியோர் வெளியிட்டுள்ளனர். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள ஹபீபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கஸ்தூரி ராஜா இஸ்லாமியராக நடித்துள்ள ஹபீபி திரைப்படம், இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Habeebi - My dear!
— Meera Kathiravan (@meerafilmdr) October 25, 2024
First look of my upcoming movie.
Kindly share and support!#HabeebiTheTamilMovie#habeebi pic.twitter.com/yATilGstxY