முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி கோயிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள தங்கக் கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சிம்மாசனத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்குப் பின் காலை 9.25 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
மேலும் படிக்க: உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினந்தோறும் சன்னதி தெரு, பெரிய ரதவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருவது வழக்கம்.
பங்குனித் திருவிழாவின் மூன்றாவது நாளில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மனமுருகி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18- ம் தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும் 19-ஆம் தேதி பெரிய தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.