கொல்கத்தா வழக்கு.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், அக்கலூரி மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் இச்சம்பவம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவர் தான் குற்றத்தை செய்தார் என்பதற்கு ஆதாரமாக செமினார் ஹாலில் இருந்த உடைந்த ப்ளூடூத்தை காண்பித்தனர். அந்த ப்ளூடூத் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் போனோடு இணைந்திருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இறந்த பெண்ணின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் சஞ்சய் ராய் மட்டும் தனியாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் செமினார் ஹாலில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் பிறகு 30 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வருவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பெண் மருத்துவர் நகத்தில் இருந்த ரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அது சஞ்சய் ராயின் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறது உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு கடந்த 18-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிர்பன் தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பளித்தது. குற்றவாளிக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்த நிலையில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மாநில அரசு 17 லட்சம் வழங்குமாறும் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?