திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல்

அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aug 20, 2024 - 01:06
Aug 20, 2024 - 15:01
 0
திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல்
திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த திரு. மு.க. ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்பதோடு, அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார். 'Go Back Modi' என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதலமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பாஜகவின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார். இதுகுறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும்? கருணாநிதி நாணய வெளியீட்டு விழா, திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்க அவசியமில்லை என்றும், பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் பயத்தில் உளறியிருக்கிறார். எங்களைப் பார்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கலைவாணர் அரங்கில் ரூ.100 நாணயம் வெளியிட்ட நிகழ்ச்சி தமிழ் நாடு அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், அழைப்பிதழ் கலைஞர் 100 என்று இலச்சினையுடன், தமிழ் நாடு அரசு இலட்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழ் நாடு அரசு தலைமைச் செயலாளர். எனவே,  ராகுல் காந்தி அல்லது அவரது தாயார் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை  கூட இந்நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மேடையில் இடம் இல்லை. 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார். மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுகவினர். தமிழ் நாட்டில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

மேலும் படிக்க: தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை.. குஷியான குட்டீஸ்.. காரணம் என்ன?

பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்ன போது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா ? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow