தமிழ் தயாளன் இயக்கத்தில் ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், ஆதவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கெவி’. இப்படத்தை கௌதம் சொக்கலிங்கம் தயாரித்துள்ளார். மேலும் இப்படம் உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமீர், பாலியல் வன்கொடுமைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், “சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது ஏற்க முடியாதது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த ஒரு விஷயத்தில்தான் வளைகுடா மற்றும் அரபுநாடுகளைப் போல சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். மரண தண்டனைதான் இதற்கான சரியான தீர்வு. இங்கே உடனே சமூக ஆர்வலர்கள், மனிதநேய காவலர்கள் வருவார்கள். மரண தண்டனையை ரத்து செய்யுங்கள் என்பார்கள். இந்த மாதிரியான குற்றத்திற்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்” என ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு ரவுடியை என்கவுண்டர் செய்துவிட்டு குற்றத்தை கட்டுப்படுத்திவிட்டதாக போலீசார் சொல்கின்றனர். ஆனால் அதற்கு பின்பு அடுத்தடுத்து வெவ்வேறு ஊர்களில் கொலை நடக்கிறது. அப்படியென்றால் அவர்களுக்கு பயமே வரவில்லை என்றுதானே அர்த்தம். அதுபோல கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அம்மாநில முதல்வரே தலையிட்டு வருகிறார். இந்த செய்திகளைப் பார்த்துக்கொண்டே வேறோரு இடத்தில் பாலியல் வன்கொடுமையை செய்பவன் மனநோயாளிதான். அவனை எப்படி விட்டுவைக்க முடியும்? பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுதான் சரியான தீர்வு” என பேசியுள்ளார்.
மேலும் படிக்க: கடவுள் இருப்பது உண்மையா?... அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு
அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பேசிய ஒரு பெண், “பெண்கள் அணியும் உடையால்தான் ஆண்கள் தூண்டப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரோ சுடிதாரும் மருத்துவர்கள் அணியும் வெள்ளை கோட்-உம் அணிந்திருந்தார். இதில் ஏதேனும் அபாசம் தெரிந்ததா? பின்னர் எப்படி இந்த சம்பவம் நடந்தது? எப்போது எங்கு என்ன குற்றம் நடந்தாலும் அதற்கு பெண்கள்தான் காரணம்.. அவர்கள் அணியும் உடைகள்தான் காரணம் என பெண்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள். 2 வயது குழந்தைகளிடம் என்ன அபாசம் கண்டீர்கள்? 2வயது குழந்தைக்கு கூட பாலியல் கொடுமை இந்த நாட்டில் நடக்கிறது. பெண்கள் மீது வீண் பழி சுமத்தாமல் சட்டத்தை கடுமையாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்” என உணர்ச்சிவசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.