Chennai Murder Case : சென்னை முகப்பேர் மேற்கு சர்ச் ரோடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைதிலி. கணவரை இழந்த மைதிலி தனது மகன் ரித்திகா உடன் தனியாக வசித்து வருகிறார். ரித்திகா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ஷியாம் கண்ணன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஷியாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி படித்து விட்டு பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ளதால் அதற்கான தேர்வு எழுதும் பணியினை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் மைதலிக்கும் அவரது மகளுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. குறிப்பாக ரித்திகா தினமும் வெளியே சென்று விட்டு இரவு லேட்டாக வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததால் தாய் மைதலி அதனை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ரித்திகா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தாய் மைதிலி மகளை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரித்திகா, தாயிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தாய் மகளை தேடி அலைந்தார்.
இதற்கிடையே வீட்டில் இருந்து கோபித்து கொண்டு வெளியே சென்ற ரித்திகா தனது காதலன் ஷியாம் கண்ணனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். உடனே ஷியாம் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்து காதலி ரித்திகாவை சந்தித்து பேசிவிட்டு பிறகு அழைத்து கொண்டு இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ரித்திகா வீட்டிற்கு சென்ற உடன் வழக்கம் போல் தாய் மைதிலி மகளை தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டதாக தெரிகிறது.
அப்போது இருவரையும் ஷியாம் கண்ணன் சமாதானம் செய்ய முயன்றாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் மைதிலி, மகள் ரித்திகா மற்றும் ஷியாமை தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரமடைந்த ஷியாம் கையால் மைதிலி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. மைதிலி மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் ரித்திகா மற்றும் அவரது காதலன் ஷியாம் இருவரும் மைதிலியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மைதிலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஜெ.ஜெ நகர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மைதிலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் காதலி தாயாரை கழுத்து நெரித்து கொலை செய்த ஷியாம் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.