உலகம்

விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்

 விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!
H-1B விசா கட்டண உயர்வால் விமானத்தில் இருந்து இறங்கிய இந்தியர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசாவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை அதிரடியாக 1 லட்சம் டாலராக உயர்த்தியதை அடுத்து, இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு செல்லவிருந்த எமிரேட்ஸ் விமானம் 3.30 மணி நேரம் தாமதமானது.

விமானத்திலிருந்து இந்தியப் பயணிகள் பலர் திடீரென இறங்கியதால் இந்த தாமதம் ஏற்பட்டது. டிரம்ப்பின் புதிய உத்தரவால், மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

விமானத்தின் கேப்டன் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், விமானத்தின் கேப்டன், பயணிகளின் அச்சத்தைப் புரிந்துகொண்டு, “இந்த அசாதாரண சூழ்நிலையில், பயணம் செய்ய விரும்பாத பயணிகள் விமானத்திலிருந்து இறங்கலாம். அது முற்றிலும் சரியானதுதான்” என்று அறிவிப்பது பதிவாகியுள்ளது. இந்த அறிவிப்பு, பயணிகளின் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

நிறுவனங்களின் அவசர அறிவிப்பு

டிரம்ப்பின் இந்த அறிவிப்பால், மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உடனடியாக தங்கள் ஊழியர்களுக்கு அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அந்த நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வெள்ளை மாளிகை விளக்கம்

இந்த பரபரப்பான சூழலுக்குப் பிறகு, வெள்ளை மாளிகை ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டது. புதிய விசா கட்டணமான $1,00,000, புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தெளிவுபடுத்தல், இந்தியர்கள் மத்தியில் எழுந்த பீதியை ஓரளவு தணித்துள்ளது.