உலகம்

நேபாளத்தில் தொடரும் வன்முறை: முன்னாள் பிரதமர், அமைச்சர்கள் மீது கொலை வெறி தாக்குதல்!

நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேபாளத்தில் தொடரும் வன்முறை: முன்னாள் பிரதமர், அமைச்சர்கள் மீது கொலை வெறி தாக்குதல்!
Violence continues in Nepal
நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறைப் போராட்டங்களின் போது, முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவுபா மற்றும் அவரது மனைவியும், வெளியுறவுத் துறை அமைச்சருமான அர்ஸு ராணா தேவுபா ஆகியோர் போராட்டக்காரர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

போராட்டம் எதிரொலி- பிரதமர் ராஜினாமா

நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நாடு தழுவிய அளவில் தடை விதிக்கப்பட்டதால் ஏராளமான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கடும் எதிர்ப்பு காரணமாக, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகத் தடையை ரத்து செய்ததோடு, தனது ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பித்தார். இதனைத்தொடர்ந்து, நேபாள ராணுவம் நாட்டின் பாதுகாப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

வன்முறையாக மாறிய போராட்டம்

'ஜென் Z' தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள் காத்மாண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டன. கோபமடைந்த இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கட்சி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கும் தீ வைத்தனர். “ஊழல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பி, இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டமாக ஒன்று திரண்டு காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் இல்லத்தில் தாக்குதல்

இந்த வன்முறைப் போராட்டங்களின் போது, முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவுபா மற்றும் அவரது மனைவியும், வெளியுறவுத் துறை அமைச்சருமான அர்ஸு ராணா தேவுபா ஆகியோர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் காத்மாண்டுவின் புடனில் கண்டா பகுதியில் உள்ள தேவுபாவின் இல்லத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்குப் பிறகு, முன்னாள் பிரதமரின் முகத்தில் ரத்தம் வழிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. காவல்துறை வந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு முன், அவரது இல்லம் சீரழிக்கப்பட்டது. மேலும், நிதி அமைச்சர் பிஷ்ணு பிரசாத் பௌடல் காத்மாண்டு வீதிகளில் போராட்டக்காரர்களால் துரத்தப்பட்டு, இளைஞர் ஒருவரால் உதைக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.