உலகம்

விவகாரத்தால் சோகம்.. அதிகளவில் பீர் குடித்த நபர் உயிரிழப்பு!

விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவகாரத்தால் சோகம்.. அதிகளவில் பீர் குடித்த நபர் உயிரிழப்பு!
Man dies from excessive beer consumption
விவாகரத்தான மனவேதனையில் கடந்த ஒரு மாத காலமாக உணவு உட்கொள்ளாமல் பீர் மட்டுமே குடித்து வந்த தாய்லாந்தை சேர்ந்த ஒருவர், தனது படுக்கை அறையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராயோங் மாகாணம் பான் சாங் மாவட்டத்தைச் சேர்ந்த தாவீசாக் நம்வோங்சா (44), தனது மனைவியைப் பிரிந்த பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த துயரத்தைப் போக்க, அவர் உணவு உட்கொள்வதை முற்றிலும் நிறுத்திவிட்டு, கடந்த ஒரு மாத காலமாக மதுபானங்களை மட்டுமே அருந்தி வந்துள்ளார். அவரது 16 வயது மகன் தினமும் அவருக்குச் சூடான உணவுகளைச் சமைத்துக் கொடுத்துள்ளார். ஆனால், மனமுடைந்த நிலையில் இருந்த நம்வோங்சா எதையும் சாப்பிட மறுத்துவிட்டதாக மகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி பள்ளியில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய மகன், தனது தந்தை வலிப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே நம்வோங்சா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

மருத்துவப் பணியாளர்கள் நம்வோங்சாவின் படுக்கை அறையை ஆய்வு செய்தபோது, 100 க்கும் மேற்பட்ட காலி பீர் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். படுக்கையில் இருந்து வெளியேறவும், உள்ளே செல்லவும் ஒரு குறுகிய பாதை மட்டுமே இருக்கும் வகையில் அந்தப் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அதிகப்படியான மது அருந்தியதே நம்வோங்சாவின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் கருதுகின்றனர். விவாகரத்து போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் செல்வது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.