உலகம்

பாதுகாப்புத் துறை இனி 'போர்த் துறை' என அழைக்கப்படும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையை, 'போர் துறை' எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை இனி 'போர்த் துறை' என அழைக்கப்படும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
US President Donald Trump
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையை 'போர்த் துறை' என மறுபெயரிட அங்கீகாரம் அளிக்கும் நிர்வாக உத்தரவில், அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று கையெழுத்திடுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை ஆகஸ்ட் 25-ஆம் தேதியே டிரம்ப் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.

வரலாற்றுப் பின்னணி

1789-ஆம் ஆண்டில், ராணுவம், கடற்படை மற்றும் கடற்படைப் படையை மேற்பார்வையிட, அமெரிக்க நாடாளுமன்றம் 'போர்த் துறையை' ஒரு அமைச்சரவை மட்டத்திலான பதவியாக நிறுவியது. இது 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் இராணுவ விவகாரங்களை நிர்வகித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1947-ஆம் ஆண்டில் போர்த் துறையும், கடற்படைத் துறையும் ஒன்றாக இணைக்கப்பட்டு தேசிய ராணுவ அமைப்பு என பெயரிடப்பட்டது. பின்னர், 1949-ஆம் ஆண்டில் இது பாதுகாப்புத் துறை என மறுபெயரிடப்பட்டது. இதன்மூலம், போர் நடவடிக்கைகளை விட தேசிய பாதுகாப்பை வலியுறுத்துவது இதன் நோக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

'போர்த் துறை' பெயர் மாற்றம்- பாதுகாப்புச் செயலாளர் விளக்கம்

டிரம்ப் இதுபற்றி கூறும்போது, “போர்த் துறை என்ற பெயர் இருந்தபோது, அமெரிக்க ராணுவத்துக்கு நம்ப முடியாத வெற்றி வரலாறு இருந்தது. அதன் பிறகுதான் அது பாதுகாப்புத் துறை என மாற்றப்பட்டது” என்றார். மேலும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், “நாம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில், போர்த் துறையின் கீழ் தான் வெற்றி பெற்றோம், பாதுகாப்புத் துறையின் கீழ் அல்ல. நாம் வெறும் பாதுகாப்புக்காக மட்டுமல்ல, தாக்குதலுக்காகவும் இருக்கிறோம். களத்தில் எப்படி வெற்றி பெறுவது என்பதை அறிந்த போர்வீரர்களை நாம் விரும்புகிறோம். ஏனெனில் வார்த்தைகளும் பெயர்களும் முக்கியம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த பெயர் மாற்றம் செய்த பின்னர், பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் இனி 'போர்ச் செயலாளர்' என அழைக்கப்படுவார். இந்த பெயரை நிரந்தரமாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க ஹெக்செத்-க்கு இந்த உத்தரவு அதிகாரம் அளிக்கிறது.

பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, பென்டகனின் இணையதளங்கள், அலுவலகப் பலகைகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு அறையும் மாற்றியமைக்கப்படும். பத்திரிகையாளர் அறை, 'பென்டகன் போர் இணைப்பு' எனப் பெயரிடப்படும் என்று தெரிகிறது.