உலகம்

போப் பிரான்சிஸ் மறைவு.. தலைவர்கள் அஞ்சலி..!

உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் மறைவு.. தலைவர்கள் அஞ்சலி..!
போப் பிரான்சிஸ் மறைவு.. தலைவர்கள் அஞ்சலி..!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் காலமானார். அவருக்கு வயது 88. இவர் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்டவர். 2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார். 1936ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த போப் பிரான்சிஸ், 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் 266-வது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார்.

போப் பிரான்சிஸ் திருச்சபையின் தந்தையாக இருந்த காலத்தில், வாடிகன் அலுவலங்களில் பெண்கள் பணியாற்ற அனுமதித்தல், தன்பால் ஈர்ப்பு இணையர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார். இந்தநிலையில் தீராத நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்ஸ், உயிரிழந்ததாக வாடிகன் அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. துயரமான தருணத்தில் கத்தோலிக்க சமூகத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, இரக்கம், பணிவு ஆகியவற்றுக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவு கூரப்படுவார் எனவும் இந்திய மக்கள் மீதான அவரது பாசம் என்றென்றும் நினைவு கூரப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். ஏழைகள் மீதான போப்பின் அரவணைப்பு, அர்ப்பணிப்பு உலகத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மனித நேயத்தை இவ்வுலகிற்கு விட்டுச் சென்றுள்ளார் என்றும், ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி, மதங்களைக் கடந்த உரையாடல்களால் கத்தோலிக்க மக்களுக்கு அப்பால் உலகம் முழுவதும் அவர் நினைவு கூரப்படுவார் என முதலமைச்சர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



தவெக தலைவர் விஜய்:

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெள்யிட்டுள்ள இரங்கல் செய்தியில், இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித போப் பிரான்ஸ் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும். இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெயிளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது, புனித திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். அமைதி, அன்பு, ஒற்றுமை என்ற செய்தியால் பல கோடி மக்களை ஊக்கப்படுத்தியவர் போப். உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.