உலகம்

இந்தியாவின் 'வாண்டட்' லிஸ்ட்: லலித் மோடியின் 63வது பிறந்தநாள் விருந்தில் மல்லையா கூத்தாட்டம்!

இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற லலித் மோடி தனது பிறந்த நாளை விஜய் மல்லையாவுடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் 'வாண்டட்' லிஸ்ட்: லலித் மோடியின் 63வது பிறந்தநாள் விருந்தில் மல்லையா கூத்தாட்டம்!
Lalit Modi Birthday Party
முன்னாள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவரான லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனில் கோலாகலமாகக் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து தப்பி சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா உட்பட அவரது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

லண்டனில் நடந்த பிறந்தநாள் விருந்து

லலித் மோடியின் பிறந்தநாள் விருந்து லண்டன், மேஃபேர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மேடாக்ஸ் கிளப்பில் (Maddox Club) நடைபெற்றது. இந்த விருந்துக்காக மேசை முன்பதிவிற்குக் குறைந்தபட்சம் ரூ.1.18 லட்சம் (1,000 பவுண்டுகள்) செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கேக் வெட்டுவது, நடனமாடுவது மற்றும் விருந்தினர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. "என் வாழ்க்கையின் அன்பே" என்று தனது துணைவியார் ரிமா பூரிக்கு நன்றி தெரிவித்து, லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

விருந்தில் விஜய் மல்லையா

முன்னர் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளராக இருந்த விஜய் மல்லையா, விருந்தினர்களுடன் காணப்பட்டார். அவரும் லலித் மோடியைப் போலவே லண்டனில் வசித்து வருகிறார். இதற்கு முன்னதாக, ஜூலை மாதம் லண்டனில் நடந்த ஒரு ஆடம்பரமான தனிப்பட்ட விருந்தில் லலித் மோடியும் மல்லையாவும் இணைந்து ஃபிராங்க் சினாட்ராவின் "மை வே" பாடலைப் பாடியிருந்தனர். இந்த விருந்தில் 310 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் அதில் கலந்துகொண்டு, லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

இருவரும் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள்

லலித் மோடி மற்றும் மல்லையா இருவரும் இந்தியாவில் பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகளைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். லலித் மோடி, பணமோசடி மற்றும் அந்நிய செலவாணி விதிமீறல்கள் உள்ளிட்ட பல அமலாக்கத்துறை வழக்குகளைச் சந்தித்து வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறுகிறார்.

விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் ஏர்லைன்ஸ் கடனை விட அதிகமாகவே மீட்டுவிட்டதாகவும், சிபிஐயின் மோசடி வழக்கை எதிர்த்துப் போராடுவதாகவும் அவர் கூறி வருகிறார்.