உலகம்

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் -  டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!
இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் நிலை உருவானதால், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் முன்னின்று தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுக்கொண்டதால் தான் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

அமெரிக்க அதிபர் இதுதொடர்பாகச் சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு இடையேயான மோதல்களைத் தான் தலையிட்டு நிறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதே போன்று, ஒரு மாதத்திற்கு ஒரு போர் வீதம் தான் பல மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், இதன் மூலம் பல மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டதாகக் கூறுவது இது முதல் முறையில்லை, கடந்த காலங்களிலும் அவர் இக்கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு இந்தியா பலமுறை மறுப்பு தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம்குறித்து இந்தியா சார்பில் கூறியுள்ளதாவது, எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என்றும், போர் நிறுத்தம் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளிடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், அமெரிக்கா இந்தப் போர் விவகாரத்தில் எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை என்பதைப் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இது போன்ற கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். உலக அளவில் அமைதியை நிலைநாட்டியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால், இந்தியா உட்பட டிரம்ப் குறிப்பிட்ட மற்ற சில நாடுகளும் அவரது கருத்தைத் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.