TN Budget: 2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. இதைத்தொடர்ந்து, 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார். மேலும், வருகிற 2025-26ம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ள செலவுகள், வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை இன்று எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முறையிட்டார். அதாவது, சமீபத்தில் டாஸ்மாக் மற்றும் மற்ற அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
நேற்று அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தார்மிக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் திமுக அரசு தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதுவே திமுகவின் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.